ADDED : மார் 29, 2025 06:26 AM

சூலுார் : சூலுார் அடுத்த கரையாம் பாளையத்தை சேர்ந்தவர் சகுந்தலா, 40. தனியார் நிறுவன ஊழியர். சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு, வேலைக்கு சென்று விட்டார்.
மாலை, திரும்பி வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த, 10 சவரன் நகை திருடப்பட்டது தெரிந்தது. இதுகுறித்து அவர் சூலுார் போலீசில் புகார் அளித்தார்.
இதே போல், அப்பகுதியில் மேலும் சில வீடுகளில் திருட்டு முயற்சி நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளியை தேடி வந்தனர்.
எஸ்.ஐ., ராஜேந்திர பிரசாத் தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில், உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அகனு, 25, நகை திருடியது தெரிந்தது. பொதுமக்கள் உதவியுடன் கரையாம்பாளையத்தில் அந்நபரை கைது செய்து, 10 சவரன் நகையை மீட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.