/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டு சுவர்களை இப்படியும் அலங்கரிக்கலாம்!
/
வீட்டு சுவர்களை இப்படியும் அலங்கரிக்கலாம்!
ADDED : ஜன 20, 2024 02:20 AM

நவீன தொழில்நுட்ப யுகத்தில் வாழ்ந்து வரும் நாம், நம் வீடுகளை, அழகாகவும் வண்ணமயமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்போம். அதற்கு பல நவீன வழிமுறைகள் உள்ளன. அது குறித்து கூறுகிறார், கோயமுத்தூர் மாவட்ட அனைத்து பொறியாளர்கள் சங்க இணை பொருளாளர் மணிகண்டன்.
ஒரு வீட்டுக்குள் நுழைந்தவுடன், முதலில் நம் கண்களில் படுவது சுவர்கள் தான். எவ்வளவு சிறிய அறையாக இருந்தாலும், அதன் பரப்பளவை விட, சுவரின் பரப்பளவு நான்கு மடங்கு அதிகமாக இருக்கும். சுவரை அலங்கரிப்பதில் பலரும் உரிய கவனம் செலுத்துவதில்லை.
பொதுவாக, சுவர்களை அலங்கரிப்பதில் பெயின்டிங், வால்பேப்பர், பேனலிங் என மூன்று வகையான வழிமுறைகள் பின்பற்றலாம். உங்கள் வீட்டு அறைகளின் தன்மை, நிதிநிலை மற்றும் தேவைக்கு ஏற்பமுடிவு செய்து கொள்ளலாம்.
பெயின்டிங்: இன்றைய சூழலில் சுவர்களை அலங்கரிப்பதில் மிகவும் மலிவானதாகவும், எளிதானதாகவும், பெயின்டிங் தான் உள்ளது. இதில், ஆயில், பவுண்ட், டிஸ்டம்பர், அக்ரிலிக், எனாமல் என பல வகைகள் உள்ளன. சுவர்களில் பெயின்டிங் செய்து அலங்கரிக்க வேண்டும் என முடிவெடுத்து விட்டால், அதற்கு எது சரியானதாக இருக்கும் என்பதை முடிவு செய்ய வேண்டும். அழகு அடிப்படையிலும்,செலவின் அடிப்படையில் இது வேறுபடும்.
பெரும்பாலான வீடுகளில் டிஸ்டம்பர் தான் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு முன், பிரைமர் அடிப்பது பெயின்டிங் வேலையை தெளிவானதாக்கும். இதில் அந்தந்த அறையின் பயன்பாடு அடிப்படையில், அவற்றுக்கான வண்ணங்களை தேர்வு செய்வது மிக முக்கியம்.
வால்பேப்பர்கள்: வால்பேப்பர்கள் எண்ணற்ற தீர்வு அளிக்கின்றன. சீரான அமைப்பு இல்லாத அறைகளை கூட அழகாக காட்டுவதில் வால்பேப்பர்களை மிஞ்சியது வேறு இல்லை.
சுவர்கள் வண்ணமாக இருப்பதை விட அதில் சில வகையான வடிவமைப்புகள், ஓவியங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைப்பவர்களின்முதல் தேர்வாக வால்பேப்பர்கள் அமைந்துள்ளன.
தயாரிப்பு நிறுவனம், பரப்பளவு மற்றும் பயன்பாடு அடிப்படையில் விலை வேறுபடும்.
பேனலிங்: இன்றைய சூழலில், பெரிய கார்ப்பரேட் அலுவலகங்கள், அரசு அலுவலகங்களில், சுவர்கள் மரத்தால் தயாரிக்கப்பட்டுள்ளன.சில ஆண்டுகள் முன் வரை பானலிங் செய்வது அதிக செலவாக இருந்தது உண்மை தான். ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. பல்வேறு வெளிநாடு மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் அதிகமாக வந்து விட்டதால் குறைந்த விலையில் பேனலிங்குகள் கிடைக்கின்றன.
அவற்றை வீடுகள் மற்றும் கார்ப்பரேட் அலுவலகங்கள் மட்டுமல்லாமல், சாதாரண கடைகள், வர்த்தக நிறுவனங்களிலும் பயன்படுத்தலாம். எளிதாக அனைவரையும் வசீகரிக்கும் தோற்றத்தை அறைகளுக்கு கொடுக்கும் தன்மையுடையவை.
இவ்வாறு, அவர் கூறினார்.