/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை சங்கனூர் ஓடைக்குள் விழுந்த வீடு
/
கோவை சங்கனூர் ஓடைக்குள் விழுந்த வீடு
UPDATED : ஜன 21, 2025 10:06 AM
ADDED : ஜன 20, 2025 11:33 PM

கோவை: கோவையில் சங்கனூர் பள்ளத்தில் தடுப்பு சுவர் கட்டும் பணிக்கான தோண்டப்பட்ட குழியில் மூன்று வீடுகள் அடுத்தடுத்து அடியோடு சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட சங்கனூர் பள்ளத்தின் இரு கரைகளிலும் தடுப்பு சுவர் கட்டும் பணி ஓராண்டுக்கு மேலாக நடந்து வருகிறது. தற்போது 68வது டாடாபாத் ராதாகிருஷ்ணன் ரோடு அண்ணன் வீதியில் சங்கனூர் பள்ளத்தின் கரையில் சுமார் 150 வீடுகள் உள்ளன. இப்பகுதியில் தடுப்பு சுவர் கட்டும் பணிக்காக ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள வீடுகளை காலி செய்ய மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
இருப்பினும் இப்பகுதி மக்கள் தங்களுக்கு வசிக்க இடமில்லை எனக்கூறி தங்களது வீட்டின் சுவரில் சுமார் ஒரு மீட்டர் மட்டும் இடித்து தந்துள்ளனர். நேற்றிரவு பகுதியில் பொக்கலைன் இயந்திரத்தின் வாயிலாக தடுப்பு சுவர்களுக்காக குழி தோண்டும் போது அருகில் இருந்த சுரேஷ் என்பவரின் வீட்டின் கான்கிரீட் தூணை உடைத்து உள்ளனர்.
இதனால் சுரேஷின் வீடு அடியோடு சாய்ந்து விழுந்தன. வீட்டின் அருகில் இருந்த லட்சுமணன், தனலட்சுமி ஆகியோர் வீடுகளும் இடிந்து விழுந்தன. லட்சுமணனின் மனைவி ரேணுகா வீட்டுக்குள் இருந்தால், அப்போது வீடு சரிவதை உணர்ந்த இவர் உடனடியாக வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இடிந்து விழுந்த வீட்டின் உரிமையாளர் கூறுகையில், 'தடுப்பு சுவர் பணிக்காக வீட்டை காலி செய்ய கூறிய போதே நாங்கள் கலெக்டர் மற்றும் மேயரிடம் தெரிவித்தோம். அப்போது எங்கள் வீட்டில் ஒரு மீட்டர் மட்டுமே நாங்கள் இடித்துக் கொடுத்தோம். தடுப்புச்சுவர் ஒப்பந்ததாரர் வேண்டுமென்று வீட்டின் தூணை இடித்துள்ளார். வீட்டை இடிக்கும் போது எங்களுக்கு எந்த தகவலும் கொடுக்கவில்லை. வீடு இடிந்து இரண்டு மணி நேரமாகியும், கவுன்சிலர் வந்து கூட பார்க்கவில்லை, என்றனர்.