/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துாய்மை பணியாளர்களுக்கு வீடு 8 மாத இழுபறிக்கு பின் ஒதுக்கீடு
/
துாய்மை பணியாளர்களுக்கு வீடு 8 மாத இழுபறிக்கு பின் ஒதுக்கீடு
துாய்மை பணியாளர்களுக்கு வீடு 8 மாத இழுபறிக்கு பின் ஒதுக்கீடு
துாய்மை பணியாளர்களுக்கு வீடு 8 மாத இழுபறிக்கு பின் ஒதுக்கீடு
ADDED : ஜூன் 24, 2025 11:04 PM

கோவை; எட்டு மாத இழுபறிக்கு பின், உக்கடம் அடுக்குமாடி குடியிருப்புக்கான பயனாளிகள், குலுக்கல் முறையில் நேற்று தேர்வு செய்யப்பட்டனர்.
உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் கட்டியபோது, உக்கடம் போலீஸ் ஸ்டேஷன் எதிரே இறங்கு தளம் கட்டுவதற்காக, சி.எம்.சி., காலனியில் இருந்த துாய்மை பணியாளர்களின் வீடுகள் இடிக்கப்பட்டன.
இவர்களுக்கு அதே இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. தற்காலிகமாக புல்லுக்காடு மைதானத்தில் தகர கொட்டகை அமைத்து, 306 குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டனர். மற்றவர்கள் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர்.
ஓராண்டுக்குப் பின் மீதி
சில்லரை மீன் மார்க்கெட்டை அகற்றுவதில், சட்ட சிக்கல் ஏற்பட்டதால், முதல் கட்டமாக, 222 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டன. பயனாளிகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், வீடு ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
கலெக்டர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதும், 492 பயனாளிகளின் அடையாள சான்றுகள் சரிபார்க்கப்பட்டன. ஒற்றை வீட்டு பயனாளிகளாக, 276 பேர் இருந்தனர். இவர்களது பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
இதிலிருந்து, 222 பேரை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதேநேரம், 30 வீடுகளுக்கு அருகாமையில், கட்டுமான பணி நடைபெற இருப்பதால், தற்போது பயனாளிகள் மட்டும் தேர்வு செய்யப்படுவர்; ஓராண்டுக்கு பின், வீடு ஒப்படைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தேர்வு செய்ய குலுக்கல்
எட்டு மாத இழுபறிக்கு பின், கெம்பட்டி காலனியில் உள்ள மாநகராட்சி சமுதாய கூடத்தில், நேற்று கோட்டாட்சியர் ராம்குமார், நிர்வாக பொறியார் ஜெகநாதன், தாசில்தார் முகமது சோயப் ஆகியோர் முன்னிலையில் குலுக்கல் நடந்தது.
வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளம் ஒதுக்கப்பட்டது. மற்றவர்களுக்கு குலுக்கல் முறையில் வீடு ஒதுக்கப்பட்டது. அருகாமையில் உள்ள காலியிடத்தில், 270 வீடுகள் கட்டியதும், மற்ற பயனாளிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.