/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலையை கடக்க முடியாமல் 'திக்...திக்...'
/
சாலையை கடக்க முடியாமல் 'திக்...திக்...'
ADDED : ஜூன் 10, 2025 09:53 PM

தொண்டாமுத்தூர்; லாலிரோடு முதல் நரசீபுரம் வரையிலான சாலையில், அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை மேற்கு புறநகரில், மருதமலை சாலை, நரசீபுரம் சாலை, சிறுவாணி சாலை முக்கிய சாலைகளாகவும், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் சாலைகளாகவும் உள்ளன.
மாநில நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இச்சாலையில், அதிவேகமாக செல்லும் வாகனங்களால், அடிக்கடி வாகன விபத்துகளும், உயிர் இழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
அதிவேகமாக செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த, முக்கிய இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், முக்கிய தலைவர்கள் வருகைக்காக, லாலி ரோடு முதல் நரசீபுரம் வரையிலான சாலையில், 25 இடங்களில் இருந்த வேகத்தடைகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அகற்றப்பட்டன. இந்த சாலையில், சாலையை ஒட்டியுள்ள பகுதியிலேயே, 10 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதிவேகமாக வாகனங்கள் செல்வதால், பள்ளிகளில் இருந்து மாணவர்கள் அச்சத்துடனே சாலையை கடந்து செல்கின்றனர். பள்ளி பகுதிகளில், வாகனங்களில் வருவோரும் வேகத்தை குறைப்பதில்லை.
அசம்பாவிதங்கள் நிகழும் முன், வேகத்தடைகள் அகற்றப்பட்ட இடங்களில், மீண்டும் சாலை விதிமுறைகளின்படி, வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.