/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கடைக்குள் வர கட்டாயப்படுத்தினால் வழக்கு பாயும்! போலீஸ் துணை கமிஷனர் எச்சரிக்கை
/
கடைக்குள் வர கட்டாயப்படுத்தினால் வழக்கு பாயும்! போலீஸ் துணை கமிஷனர் எச்சரிக்கை
கடைக்குள் வர கட்டாயப்படுத்தினால் வழக்கு பாயும்! போலீஸ் துணை கமிஷனர் எச்சரிக்கை
கடைக்குள் வர கட்டாயப்படுத்தினால் வழக்கு பாயும்! போலீஸ் துணை கமிஷனர் எச்சரிக்கை
ADDED : அக் 12, 2024 11:23 PM

கோவை : ''தீபாவளி பண்டிகைக்கு பொருட்கள் வாங்க வருவோரை, கடைக்குள் வர கட்டாயப்படுத்தினால் வழக்கு பதிவு செய்யப்படும்,'' என, போலீஸ் துணை கமிஷனர் சரவணக்குமார் எச்சரித்துள்ளார்.
கோவை டவுன்ஹால், பெரிய கடை வீதி பகுதியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய ஜவுளி கடைகள், நகைக்கடைகள், பேன்ஸி ஸ்டோர்கள் உள்ளன. பொருட்கள் வாங்க தினமும் நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஆடை, நகைகள், பட்டாசு உள்ளிட்டவை வாங்க வருவோர் கூட்டம் அதிகரித்துள்ளது.
அவர்களை கடைக்கு அழைத்துச் செல்லும் வகையில், சிறிய கடைகள் சார்பில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடை முன் நின்று, அவ்வழியாக செல்லும் பொதுமக்களை, தங்களது கடைக்கு வந்து பொருட்கள் வாங்க அழைக்கின்றனர். இதில், அப்பகுதி கடைகளின் ஊழியர்கள் இடையே போட்டி ஏற்படுகிறது. சாலைக்கு வந்து நிற்கும் ஊழியர்கள், பொதுமக்களை தங்களது கடைக்கு வருமாறு கட்டாயப்படுத்துகின்றனர். சில சமயங்களில் கையைப் பிடித்து, இழுத்துச் செல்வதால் வாக்குவாதம் ஏற்படுகிறது. சில மாதங்களுக்கு முன், பெரிய கடை வீதி பகுதியில் கடை ஊழியர்கள் சாலையில் செல்லும் பெண்களை வழிமறித்து கையை பிடித்து கடைக்குள் அழைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அத்துமீறிய ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
இதுபோன்ற சம்பவம் நேற்று முன்தினமும் அரங்கேறியுள்ளது. உக்கடம் பகுதியை சேர்ந்த, 45 வயது பெண், வைசியாள் வீதியில் சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் உள்ள துணிக்கடை ஊழியர்கள் தங்களது கடைக்கு வரும்படி கூறியுள்ளனர். 'துணி வாங்க வரவில்லை' என, அப்பெண் கூறியுள்ளார். உடனே, அப்பெண்ணை அவதுாறாக பேசியதால், பெரிய கடை வீதி போலீசில் புகார் அளித்தார். கடை உரிமையாளர் சலீம், 43, செயதுல்லா, 28, ஆசிக், 34, அருண், 30 ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக, கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணக்குமார் கூறுகையில், ''தீபாவளி பண்டிகை வருவதால் தொழில் போட்டியில், சிலர் இதுபோன்று நடந்து கொள்கின்றனர். இவற்றை கண்காணிக்க அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. கடைக்கு வெளியே நின்று யாரையும் அழைக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்தும் ஊழியர்கள் மீதும், கடை உரிமையாளர் மீதும் வழக்கு பதியப்படும்,'' என்றார்.