/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நவராத்திரி கொலு வைத்தால்... நீங்கள் வேண்டிய வரம் கிடைக்கும்!
/
நவராத்திரி கொலு வைத்தால்... நீங்கள் வேண்டிய வரம் கிடைக்கும்!
நவராத்திரி கொலு வைத்தால்... நீங்கள் வேண்டிய வரம் கிடைக்கும்!
நவராத்திரி கொலு வைத்தால்... நீங்கள் வேண்டிய வரம் கிடைக்கும்!
ADDED : அக் 10, 2024 05:40 AM

கோவை, : 'தினமலர்' மற்றும் 'அதிசியா பிராப்பர்ட்டி' சார்பில், நவராத்திரி கொலு விசிட், ராம்நகர், சித்தாபுதுார் மற்றும் பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில், நேற்று நடந்தது.
l கோவை ராம்நகர் ரமணி காஸ்டல் அபார்ட்மென்டில் வசிக்கும் நம் வாசகர் ஸ்ரீனிவாச சுதர்சனன், தன் வீட்டில் 500 க்கும் மேற்பட்ட கடவுள் உருவ பொம்மைகளை, 23 படிகளில் கொலு வைத்து அசத்தி இருக்கிறார். அவர் கூறுகையில், ''பிறப்பு முதல் பரமாத்மாவை சரணடையும் வரை, மனித வாழ்க்கை சுழற்சியை விளக்கும் விதமாக, கொலு வைத்து இருக்கிறேன். நமக்கு நடக்கும் எல்லா நன்மைகளும், அம்பாளின் அனுக்கிரகத்தால் தான் நடக்கின்றன,'' என்றார்.
l ராம்நகர் ஸ்வாகத் கிருஷ்ணா அபார்ட்மென்டில் வசிக்கும் வாசகி கலா நாராயணன், தனது பாட்டி காலத்து, அம்பாள் உருவ பொம்மைகளை, கொலுவில் வைத்து இருக்கிறார். ''நவராத்திரி எப்போது வரும் என்று காத்துக்கொண்டு இருப்போம். நம் ஆன்மிக பாரம்பரியத்தை பாதுகாக்க, நவராத்திரி கொலு வழிபாடு முக்கியம்,'' என்றார் அவர்.
l ராம்நகர் கோகுல் வீதியில் வசிக்கும் வாசகி பாரதி கூறுகையில், ''நவராத்திரி கொலு வைக்கும் ஒன்பது நாட்களும், எங்கள் வீடு எப்போதையும் விட அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்,'' என்றார்.
l அதே வீதியில் வசிக்கும் நம் வாசகி ஜெயப்பிரதா கூறுகையில், ''என் மாமியார் தவறாமல் கொலு வைப்பார். கல்யாணமாகி வந்த பிறகு நானும் வைக்கிறேன். என்னை விட, என் மகள் கொலு வைப்பதில் அதிகம் ஆர்வமாக இருக்கிறாள்,'' என்றார்.
l ராம்நகர் ராஜாஜி ரோடு பகுதில் வசிக்கும் நம் வாசகி ரம்யா ரமேஷ் கூறுகையில், ''நாங்கள் பாட்டி காலத்தில் இருந்து, 80 ஆண்டுகள் தொடர்ச்சியாக கொலு வைத்து வருகிறோம். இதுவரை நவராத்திரி கொலு வைக்க, தடை ஏற்பட்டதே இல்லை,'' என்றார்.
l அதே வீதியில் வசிக்கும் வாசகி மங்களம் மவுலிகுமார் கூறுகையில், ''நான் 30 வருடமாக கொலு வைக்கிறேன். ஒன்பது நாட்கள் அம்பாளை பூஜை செய்யும் போது, மன அமைதியும், நிம்மதியும் கிடைக்கிறது,'' என்றார்.
l காந்திபுரம் நான்காவது வீதியில் வசிக்கும் வாசகி மகராசி பன்னீர்செல்வம், தனது வீட்டில் சிறிய அளவில் சிறப்பாக கொலு வைத்து இருக்கிறார். அவர் கூறுகையில், ''நான் சிறுமியாக இருந்த போது அம்மா வீட்டில் கொலு வைப்பார். அதன் பிறகு நான் 20 வருடமாக கொலு வைக்கிறேன். கொலு வைக்கும் ஒன்பது நாட்களும் வீடு கோவில் போல் இருக்கிறது,'' என்றார்.
l காந்திபுரம் டாடாபாத் சன் பிரிக்ஸ் அபார்ட்மென்டில் குடியிருக்கும் வாசகி மஞ்சுளா சுப்பாராவ், கூறுகையில், ''அம்பாளை பூஜை செய்தால் கைவிடமாட்டாள். மகனுக்கு நல்ல வரன் கிடைக்க வேண்டும் என, கொலு வைத்து பூஜை செய்தேன். இப்போது சரஸ்வதி மாதிரி அழகான மருமகள் கிடைத்து இருக்கிறாள்,'' என்றார்.
l கண்ணப்பன் நகர் தக்சின் ஹோம் அபார்ட்மென்டில் குடியிருக்கும், நம் வாசகி திரிபுரசுந்தரி செந்தில்வேல், தனது வீட்டை கொலு பொம்மைகளால் சிறப்பாக அலங்கரித்து இருக்கிறார். அவர் கூறுகையில், '' நவராத்திரி கொலு வைத்து பிரார்த்தனை செய்தால், நினைத்த காரியம் நடக்கும். ஒவ்வொரு ஆண்டும் கொலுவின் போது, அம்பாளிடம் ஒரு வேண்டுகோள் வைத்து பூஜை செய்வேன். அது அடுத்த ஆண்டு நிறைவேறிவிடும்,'' என்றார்.
l அதே அபார்ட்மென்டில் வசிக்கும் வாசகி சுகிர்தா வாசன் கூறுகையில், ''என் பாட்டி, அம்மா காலத்தில் இருந்து, 55 வருடமாக கொலு வைக்கிறோம். நல்ல பாசிடிவ் எனர்ஜி கிடைக்கிறது. மன கஷ்டம், பண கஷ்டம் இல்லை. வாழ்க்கை நிம்மதியாக போகிறது,'' என்றார்.
l சிவானந்தா காலனியில் காக்கினிடோ அகடாமி நடத்து லட்சுமணன் மற்றும் பானுரேகா ஆகியோர், தங்கள் அகடமியில் இரண்டு அறைகள் முழுவதும் கொழு வைத்து இருக்கிறார். அவர் கூறுகையில், ''இங்கு கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகள் படிக்கின்றனர். அவர்களுக்கு அம்பாளின் அருள் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆண்டும் தோறும் தவறாமல் கொலு வைத்து வழிபாடு செய்கிறோம்'' என்றார்.
l ஆவாரம்பாளையம் முருகன் கோவில் வீதியில் வசிக்கும் வாணிஸ்ரீ கண்ணதான், ஆண்டாள் பிறப்பு முதல் ரங்கநாதரை சேரும் வரை, காட்சிப்படுத்தி இருக்கிறார். அவர் கூறுகையில், ''வீடு கட்ட வேண்டும் என, வேண்டி கொலு வைத்தேன்; வீடு கட்டிவிட்டேன். என் தம்பிக்கு குழந்தை பிறக்க வேண்டும் என, கொலு வைத்தேன்; குழந்தை பிறந்துள்ளது. எல்லாம் அம்பாள் செயல்,'' என்றார்.
இன்று ஆர்.எஸ்.புரம், பொன்னையராஜபுரம், காந்திபார்க் பகுதிகளுக்கு தினமலர் குழுவினர் கொலு விசிட் வருகின்றனர்.

