/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடைக்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிப்பு! பாதுகாப்பாக இருக்க அறிவுரை
/
கோடைக்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிப்பு! பாதுகாப்பாக இருக்க அறிவுரை
கோடைக்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிப்பு! பாதுகாப்பாக இருக்க அறிவுரை
கோடைக்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிப்பு! பாதுகாப்பாக இருக்க அறிவுரை
ADDED : பிப் 16, 2025 10:12 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால், சில வழிமுறைகளைப் பின்பற்றி வெப்ப பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம், என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பகலில் வெயிலில் சுட்டெரிக்கிறது. கோடைக்கு முன்னரே வெப்பத்தின் தாக்கம், மக்களை சோர்வடையச் செய்கிறது.
சோர்வு, உறக்கமின்மை என பல பிரச்னைகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இயற்கையை மாற்ற முடியாது என்பதால் அதன் தாக்கத்தில் இருந்து நம்மை காத்துக் கொள்ள வழிமுறைகள் மட்டுமே உள்ளன.
இது குறித்து டாக்டர் ராஜ்குமார் கூறியதாவது:
வெயில் காலங்களில், முடிந்தவரை, தினமும் இரண்டு வேளை குளிப்பதை கட்டாயமாக்க வேண்டும். காற்றோட்டம் அதிகமுள்ள பகுதியில் இருக்க வேண்டும். குழந்தைகளை வெயிலில் விளையாட விடக் கூடாது.
வியர்வை அதிகம் வெளியேறும் போது, உப்பு சக்தி குறைகிறது. தசை பிடிப்பு, மயக்கம், ரத்தநாளம் விரிவடைந்து, மூளைக்கு ரத்தம் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு, பாதிப்பு, வலிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் இருக்க தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்லுதல் அவசியம். ஓ.ஆர்.எஸ்., எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகளை குடிப்பது நல்லது.
வெப்பத்தை ஈர்க்கும், கருப்பு, கருநீலம் உள்ளிட்ட நிற உடைகளை அணியாமல், வெள்ளை, மஞ்சள், இளம்பச்சை நிற உடைகளை தேர்வு செய்து அணிய வேண்டும். நடந்தும், இரு சக்கர வாகனங்களில் செல்லும் போதும், நேரடியாக தலையில் வெப்பம் இறங்காமல் பாதுகாக்கும் வகையில், தொப்பி அணிந்து கொள்ள வேண்டும்.
கண் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கூலிங்கிளாஸ் அணியலாம். எண்ணெய், காரம், இறைச்சி உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ள காலை, 11:00 மணி முதல் மாலை, 3:00 மணி வரை வெளியே செல்வதை பெரும்பாலும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.