காணாமல் போகும் முதியோர் அதிகரிப்பு: கவனமாக இருக்கணும் வீட்டார்
காணாமல் போகும் முதியோர் அதிகரிப்பு: கவனமாக இருக்கணும் வீட்டார்
UPDATED : செப் 18, 2026 04:47 PM
ADDED : செப் 18, 2026 04:31 PM

கோவை: வயது முதிர்வு, மனநல பாதிப்பு, குடும்ப பிரச்னை, காதல் விவகாரம் உள்ளிட்ட பல காரணங்களால் வீட்டை விட்டு வெளியேறும் நபர்கள் காணாமல் போகும் சம்பவங்கள், கோவை மாநகரில் தொடர்கின்றன. காணாமல் போனவர்கள் பட்டியலில் அதிகம் இருப்பது முதியோர் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், எட்டு மாதங்களில் காணாமல் போனதாக 413 பேர் குறித்து புகார்கள் பதிவாகியுள்ளன. இதில், 129 ஆண்கள், 177 பெண்கள், 25 சிறுவர்கள், 82 சிறுமிகள்.
காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்படுகின்றன. போலீசார் தேடி இதுவரை 78 ஆண்கள், 128 பெண்கள், 20 சிறுவர்கள், 71 சிறுமிகள் என மொத்தம் 297 பேர் மீட்கப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
காணாமல் போவதற்கு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு காரணங்கள் உள்ளன. குடும்ப பிரச்னை, மன உளைச்சல், காதல் விவகாரம் உள்ளிட்ட காரணங்களுடன், வயது முதிர்வு காரணமாக ஏற்படும் மறதியும் முக்கிய காரணமாக உள்ளது.
குறிப்பாக, சில முதியோர் வீட்டை விட்டு வெளியே சென்ற பிறகு, தாங்கள் எங்கு செல்கிறோம், எந்த பகுதியில் வசிக்கிறோம், வீட்டுக்குத் திரும்பும் வழி எது என்பதையே மறந்து விடுகின்றனர்.
இதனால், வழி தெரியாமல் பல பகுதிகளுக்கு சென்று தவிக்கும் நிலை ஏற்படுகிறது. சிலர் வெகுதுாரம் சென்ற பிறகு மீட்கப்படுகின்றனர்.
அடையாளம் மற்றும் முகவரி தெரியாததால், அவர்களை குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதிலும் சிரமம் ஏற்படுவதால், வெளியில் செல்லும் முதியோர் விஷயத்தில் வீட்டார் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் போலீசார்.
