வெளிநாட்டு சொத்து பற்றி தகவல் தெரிவிக்க டிச., 31 வரை அவகாசம்! பட்டய கணக்காளர் நிகழ்ச்சியில் தகவல்
வெளிநாட்டு சொத்து பற்றி தகவல் தெரிவிக்க டிச., 31 வரை அவகாசம்! பட்டய கணக்காளர் நிகழ்ச்சியில் தகவல்
UPDATED : நவ 05, 2026 12:00 AM
ADDED : நவ 04, 2026 11:44 PM
கோவை: இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் கோவை கிளை மற்றும் கோவை வருமான வரித்துறை சார்பில், ‘பாஸ்ட் –டி.எஸ் 2026’ என்ற திட்டத்தில் ‘பட்டய கணக்காளர்களின் பங்கு’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஆர்.எஸ்.புரம் ஐ.சி.ஏ.ஐ., பவனில் நேற்று நடந்தது. இந்திய பட்டய கணக்காளர் நிறுவன கோவை கிளை தலைவர் சர்வஜித் எஸ்.கிருஷ்ணன் வரவேற்றார்.
வருமான வரித்துறை கூடுதல் இயக்குநர் (புலனாய்வு) ஸ்ரீவிஜய் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசுகையில், ‘இந்தியர்கள் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று அங்கு சொத்து வாங்கி, அதற்கு வருமான வரி கட்ட தவறினால், கருப்பு பணமாக மாறிவிடும். அதை தவிர்க்க பாஸ்ட் டி.எஸ் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. சிறு வரிசெலுத்துவோருக்கு ஒருமுறை மட்டுமே இந்த வாய்ப்பு கிடைக்கும். இத்திட்டம் இந்தாண்டு டிச., 31 வரை நடைமுறையில் உள்ளது’ என்றார்.
வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் எஸ்.கே. செந்தில்குமார் பேசுகையில், இத்திட்டம் தண்டிப்பதற்கு அல்ல; உதவுவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே சிறு வரிசெலுத்துவோரிடம் சிக்கல் இருந்தால், தயக்கமின்றி வருமான வரி துறையை அணுகலாம்’ என்றார்.
நிகழ்ச்சியில், வருமான வரி துணை ஆணையர் ஐஸ்வர்யா, துணை இயக்குநர் சுதர்சன் ஆகியோர் திட்டத்தின் அம்சங்களையும், அதில் பட்டயக் கணக்காளர்களின் பங்கு குறித்தும் விளக்கினர்.
இந்திய பட்டய கணக்காளர் நிறுவன கோவை கிளை தலைவர் சர்வஜித் எஸ். கிருஷ்ணன் கூறியதாவது: வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்பியவர்கள், நிறுவன பணிக்காக சென்று வந்தவர்கள் பலருக்கு, வெளிநாட்டில் வங்கி கணக்கு, ஓய்வூதிய நிதி, பங்குகள் உள்ளன. இந்தியாவில் வசிப்பவர் ஆன பிறகு இவற்றை கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்ற விதிமுறை தெரியாததால் பலர் விட்டுள்ளனர்.
இப்புதிய திட்டத்தின் கீழ் தாமாக முன்வந்து வெளிப்படுத்தினால், எதிர்கால அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கைகளை தவிர்த்து, குறைந்த செலவில் நிம்மதி பெறலாம். வரிசெலுத்துவோரின் நம்பிக்கைக்குரிய ஆலோசகர்களான பட்டயக் கணக்காளர்களை, இவர்கள் உடனே அணுக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சண்முகவடிவேல் நன்றி கூறினார். நிகழ்ச்சியில், முன்னாள் தலைவர்கள், மூத்த மற்றும் இளம் பட்டய கணக்காளர்கள், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பட்டய கணக்காளர்கள் சங்கம், தென்னிந்திய தணிக்கையாளர்கள் சங்கம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
