/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தல்
/
வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தல்
ADDED : நவ 11, 2025 10:21 PM
பொள்ளாச்சி: வாகனங்களின் அதிவேகம் மற்றும் போக்குவரத்து விதிமீறலை கட்டுப்படுத்த, முக்கிய வழித்தடங்களில் கேமரா பொருத்தி கண்காணித்து, அபராதம் விதிக்க வேண்டும்.
பொள்ளாச்சி - கோவை இடையிலான தேசிய நெடுஞ்சாலையில், நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்தும் வருகிறது. ஆனால், வாகன ஓட்டுநர்களின் அஜாக்கிரதை, அதிவேகம், போக்குவரத்து விதிமீறல் காரணமாக, அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. விபத்துகளால் உயிர் பலியும் ஏற்படுகிறது.
இதனை கண்டறிந்து தடுக்கவும், கட்டுப்படுத்தும் நோக்கில், இவ்வழித்தடத்தில் கேமரா பொருத்தி, கண்காணிப்பதுடன் விதிமீறலுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
பொள்ளாச்சி - கோவை இடையிலான நான்கு வழிச்சாலையின் நடுவே மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. இடைப்பட்ட ஊர்களுக்கு செல்லும் வகையில், மையத்தடுப்பில் இடைவெளியும் அமைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கோவில்பாளையம், தாமரைக்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில், ஒருவழிப்பாதையில் அதிகப்படியான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. பிரதான வழித்தடத்தில், வாகனங்கள் வேகமாக இயக்கப்படுகின்றன. இதனிடையே விதிமீறி இயக்கப்படும் வாகனங்களால், விபத்து அபாயம் அதிகரிக்கிறது.
தேசிய நெடுஞ்சாலையில் வாகன வேகத்தின் அளவு குறிப்பிட்டும், போக்குவரத்து விதிமீறலை தடுக்க, எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். முதற்கட்டமாக, இவ்வழிதடத்தில், குறிப்பிட்ட துார இடைவெளியில் கண்காணிப்பு கேமரா பொருத்தி வாகனங்களின் வேகம், விதிமீறலைக் கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும்.
அதனை பிற வழித்தடங்களிலும் விரிவுபடுத்தினால் மட்டுமே வாகனங்களின் அதிவேகம் மற்றும் விதிமீறலை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு, கூறினர்.

