/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊராட்சிகளில் தீவிர வரி வசூல்; மாவட்ட கலெக்டர் ஆய்வு
/
ஊராட்சிகளில் தீவிர வரி வசூல்; மாவட்ட கலெக்டர் ஆய்வு
ஊராட்சிகளில் தீவிர வரி வசூல்; மாவட்ட கலெக்டர் ஆய்வு
ஊராட்சிகளில் தீவிர வரி வசூல்; மாவட்ட கலெக்டர் ஆய்வு
ADDED : பிப் 16, 2025 11:39 PM

மேட்டுப்பாளையம்; காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில், நடைபெற்று வரும், தீவிர வரிவசூல் பணிகளை, கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் ஆய்வு செய்தார்.
ஊராட்சிகளின் வருவாயை பெருக்கவும், பொதுமக்களின் அலைச்சலை குறைக்கவும், மாவட்ட நிர்வாகம், கிராமங்களை தேடி ஊராட்சி நிர்வாக என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.
இதை அடுத்து ஊராட்சிகளில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லுாரிகள், தொழிற்சாலைகள் ஆகியவை ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி, சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி ஆகியவை வசூல் செய்ய ஒவ்வொரு ஊராட்சியிலும், பல இடங்களில் முகாம் அமைத்து, வரி வசூல் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.கோவை மாவட்ட புதிய கலெக்டராக பொறுப்பேற்ற பவன்குமார் நேற்று முன்தினம் காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கெம்மாரபாளையம், தோலம்பாளையம், வெள்ளியங்காடு, ஜடையம்பாளையம், பெள்ளாதி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் தீவிர வரி வசூல் முகாம்களை ஆய்வு செய்தார்.
பெள்ளாதி ஊராட்சியில் நடந்த முகாமை கலெக்டர் பார்வையிட்டு, பொதுமக்களிடம் வரிகள், குடிநீர் கட்டணம் ஆகியவை எவ்வாறு செலுத்துகிறீர்கள் என விவரங்களை கேட்டு அறிந்தார்.
ஊராட்சி செயலர் சுரேஷிடம், கம்ப்யூட்டரில் ஆன்லைன் வாயிலாக பொதுமக்கள் வரிகள் செலுத்துகிறார்களா, அவர்களுக்கு நீங்கள் எவ்வாறு வழிகாட்டுகிறீர்கள் என்ற விவரங்களை கேட்டு அறிந்தார். மேலும் ஊராட்சி சார்பில் வழங்கியுள்ள வரி வசூல் புத்தகத்தையும் வாங்கி ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கமலக்கண்ணன், காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.