/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சர்வதேச யோகா தினம்; பள்ளிகளில் கொண்டாட்டம்
/
சர்வதேச யோகா தினம்; பள்ளிகளில் கொண்டாட்டம்
ADDED : ஜூன் 21, 2025 12:30 AM

சர்வதேச யோகா தினத்தையொட்டி, பள்ளிகளில் மாணவர்கள் பல்வேறு யோகாசனங்கள் செய்து கொண்டாடினர்.
குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 760 மாணவர்கள் உள்ளனர். மாணவர்களுக்கு இணை செயல்பாடுகளுடன் யோகா பயிற்சிகளும் தொடர்ந்து வழங்கப்படுகிறது.
சர்வதேச யோகா தினத்தையொட்டி, திருமூர்த்திமலை பரஞ்ஜோதி ஆசிரமத்தின் யோகா ஆசிரியர் கமலம் தலைமையில், மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
தலைமையாசிரியர் மாரியப்பன், யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கமளித்தார். உடற்கல்வி ஆசிரியர்கள் யோகா பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர். ஆசிரியர் முத்துக்கருப்பன் நன்றி தெரிவித்தார்.
* பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார். இயற்பியல் ஆசிரியர் கணேசபாண்டியன் முன்னிலை வகித்தார். நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் சரவணன் வரவேற்றார்.
உடற்கல்வி இயக்குனர் பாலசுப்ரமணியன் ' யோகா கலையின் மாண்பும் உடல்நலமும்' என்ற தலைப்பில் பேசினார். மாணவர்கள் பத்மாசனம், வஜ்ராசனம், தனுராசனம், சக்ராசனம் உள்ளிட்ட ஆசனங்கள் செய்தனர். ஆசிரியர் ரமேஷ் நன்றி தெரிவித்தார்.
* ஆண்டியகவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மாணவர்கள் யோகா ஆசனங்கள் செய்தனர். பள்ளி தலைமையாசிரியர் தங்கவேல் தலைமை வகித்தார்.
* பாலப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த விழாவில், தலைமையாசிரியர் வள்ளிமயில் தலைமை வகித்தார். மாணவர்கள் பல்வேறு யோகா ஆசனங்கள் செய்தனர். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு யோகா பயிற்சி செய்வதால் உடல்நலம் மேம்படுவது குறித்து விளக்கமளித்தனர். ஆசிரியர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
* உடுமலை அருகே ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், பள்ளி தலைமையாசிரியர் தாரணி தலைமையில், மாணவர்கள் ஆசனங்களை செய்து காட்டினர். மேலும், ஆசிரியர் கண்ணபிரான் மாணவர்களுக்கு கூடுதலாக எளிதாக செய்யக்கூடிய ஆசனங்களையும் பயிற்சி அளித்தார்.
* குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், கோவை ஈஷா யோக மையத்தின் வாயிலாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உப யோகா மற்றும் சூரியசக்தி பயிற்சிகள் வழங்கினர். மாணவர்கள் உற்சாகமுடன் கற்றுக்கொண்டனர். தொடர்ந்து இறைவணக்க கூட்டத்தில் நாள்தோறும் ஒரு ஆசனம் செய்து வருகின்றனர்.
பொள்ளாச்சி
* பொள்ளாச்சி அருகே, சூளேஸ்வரன்பட்டி ருத்ரம் யோகா மற்றும் பிட்னஸ் மையம் சார்பில், உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. யோகா ஆசிரியர் பிரியா, மாணவர்களுக்கு யோகா பயிற்சியளித்தார். அதில், பலவிதமான யோகா பயிற்சிகளில் மாணவர்கள் ஈடுபட்டனர்.
* பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப்பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில், மாணவர்கள் சூரிய நமஸ்காரம், பத்மாசனம், புஜங்காசனம், வஜ்ராசனம், தனுராசனம் உள்ளிட்ட யோகா செய்து அசத்தினர்.மேலும், யோகா என எழுதி, அதில் அமர்ந்து யோகாசனம் செய்தனர்.