/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரும்பு 'டெக்' தரம்; ஆய்வு செய்யப் போகிறது லக்னோ டீம்
/
இரும்பு 'டெக்' தரம்; ஆய்வு செய்யப் போகிறது லக்னோ டீம்
இரும்பு 'டெக்' தரம்; ஆய்வு செய்யப் போகிறது லக்னோ டீம்
இரும்பு 'டெக்' தரம்; ஆய்வு செய்யப் போகிறது லக்னோ டீம்
ADDED : பிப் 10, 2025 06:41 AM

கோவை : கோவை - அவிநாசி ரோடு மேம்பாலத்துக்கு பயன்படுத்த, ஹைதராபாத் நிறுவனத்தில் தயாராகியுள்ள இரும்பு 'டெக் தரத்தை பரிசோதிக்க, லக்னோ ரயில்வே ஆராய்ச்சி குழு வர இருக்கிறது.
கோவை - அவிநாசி ரோட்டில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, மாநில நெடுஞ்சாலைத்துறையால் (சிறப்பு திட்டங்கள்) மேம்பாலம் கட்டப்படுகிறது. ஹோப் காலேஜ் பகுதியில் ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ள பாலத்தை கடந்து செல்ல, 52 மீட்டர் நீளத்துக்கு இரும்பு 'டெக்' அமைக்க வேண்டும். ரயில்வேக்கு சொந்தமான இடம் என்பதால், அத்துறையினரின் மேற்பார்வையில், பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான இரும்பு 'டெக்', ஹைதராபாத்தில் உள்ள நிறுவனத்தில் தயார் செய்யப்பட்டுள்ளது. இதன் தரத்தை ரயில்வே நிர்வாகம் நான்கு கட்டமாக ஆய்வு செய்வது வழக்கம்; இதுவரை மூன்று கட்ட ஆய்வு முடிந்திருக்கிறது. இனி, லக்னோவில் இருந்து ரயில்வே ஆராய்ச்சி குழு வருகை தந்து, தரத்தை பரிசோதிக்க வேண்டும்.
'டெக்' தயாரிக்க பயன்படுத்திய இரும்பு தடிமன், 'வெல்டிங்' செய்துள்ள இடத்தின் உறுதித்தன்மை, நீளம், அகலம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்வர். இதன்பின், இரும்பு 'டெக்'கிற்கு சில்வர் நிற பெயிண்ட் பூசப்படும். அதை, அரக்கோணம் ரயில்வே குழுவினர் சோதனை செய்வர். இதன் பிறகே, ஹைதராபாத்தில் இருந்து கோவைக்கு தருவிக்கப்பட்டு, ரயில்வே அதிகாரிகள் முன்னிலையில், ஹோப் காலேஜ் பகுதியில் துாண்களுக்கு இடையே பொருத்தப்படும். இப்பகுதியில் மட்டும் மூன்று துாண்களுக்கு இடையே ஓடுதளம் அமைக்க வேண்டியுள்ளது.
நவ இந்தியா பகுதியில் மேம்பாலத்துக்கு குறுக்கே செல்லும் உயரழுத்த மின்கம்பிகளை அகற்றி, ரோட்டுக்கு கீழ் புதைவடமாக பதிக்க வேண்டும். இதற்காக, எஸ்.என்.ஆர்., ரோட்டில் குழி தோண்டும் பணி நடந்து வருகிறது. உயரழுத்த மின் கம்பியை அகற்றினால் மட்டுமே இப்பகுதியில் ஓடுதளம் அமைக்க முடியும். ஏப்., மாதத்துக்குள் முடிக்க அமைச்சர் வேலு இலக்கு நிர்ணயித்து இருப்பதால், இவ்விரு வேலைகளையும் நெடுஞ்சாலைத்துறையினர் வேகப்படுத்தியுள்ளனர்.

