ஸ்பெஷல் பஸ் என்றால் கூடுதல் கட்டணமா? அ.போ.கழகம் இழப்பீடு வழங்க உத்தரவு
ஸ்பெஷல் பஸ் என்றால் கூடுதல் கட்டணமா? அ.போ.கழகம் இழப்பீடு வழங்க உத்தரவு
UPDATED : நவ 05, 2026 11:47 PM
ADDED : நவ 04, 2026 05:07 PM
கோவை: சவுரிபாளையம் சண்முகசுந்தரம், அரசு போக்குவரத்து கழக கண்டக்டராக வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவருக்கு இலவச பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது.
சண்முகசுந்தரம் தன் குடும்பத்தோடு ஊட்டி மலர் கண்காட்சி பார்க்க புறப்பட்டார்.
கடந்த 2024, மே 14 ல் மேட்டுப்பாளையம் ரோட்டிலுள்ள பஸ் ஸ்டாண்டிற்கு வந்தனர். ஊட்டிக்கு அரசு பஸ்சில் சென்றனர். மூவருக்கு முழு கட்டண சீட்டு, 8 வயது குழந்தைக்கு அரை கட்டண பயண சீட்டு பெற்றார்.
முழு டிக்கெட்டுக்கு 70 ரூபாயும், அரை டிக்கெட்டுக்கு 55 ரூபாயும் கண்டக்டர் கேட்டார். அரை டிக்கெட்டுக்கு 35 ரூபாய் தானே? கூடுதலாக 20 ரூபாய் வசூலிப்பது ஏன்? என்று சண்முகசுந்தரம் கேட்டார். இது ஸ்பெஷல் பஸ் என்பதால், நிர்வாகத்தின் வாய்மொழி உத்தரவுப்படி 20 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதாக கண்டக்டர் பதில் அளித்தார்.
கோவை கோட்ட அரசு போக்குவரத்து அதிகாரிக்கு புகார் அனுப்பினார். பதில் வரவில்லை. நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் கொடுத்தார். ஆணைய தலைவர் தங்கவேல், உறுப்பினர் மாரிமுத்து விசாரித்தனர்.
‘‘அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரரிடம் கூடுதலாக பெற்ற கட்டணத்தை திரும்ப செலுத்த வேண்டும். மன உளைச்சலுக்கு இழப்பீடாக 5,000 ரூபாய், வழக்கு செலவு 5,000 ரூபாய் வழங்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.
