/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புல்லட் என்றால் ஆண்கள் மட்டும்தான் ஓட்டணுமா? இதோ 'ஸ்டார்ட்' பண்ணி விட்டார்கள் பெண்கள்!
/
புல்லட் என்றால் ஆண்கள் மட்டும்தான் ஓட்டணுமா? இதோ 'ஸ்டார்ட்' பண்ணி விட்டார்கள் பெண்கள்!
புல்லட் என்றால் ஆண்கள் மட்டும்தான் ஓட்டணுமா? இதோ 'ஸ்டார்ட்' பண்ணி விட்டார்கள் பெண்கள்!
புல்லட் என்றால் ஆண்கள் மட்டும்தான் ஓட்டணுமா? இதோ 'ஸ்டார்ட்' பண்ணி விட்டார்கள் பெண்கள்!
ADDED : பிப் 08, 2024 06:51 AM

கோவை, : பெண்களுக்கான சுதந்திரமும், தன்னம்பிக்கையும் கல்வி கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதே சமயம் திருமணமான பெரும்பாலான பெண்கள், மிகவும் சுதந்திரமாக உணர்வது இருசக்கர வாகனம் இயக்க, கற்றுக்கொண்ட பிறகுதான்.
அடுப்படி வேலைகளை எளிமைப்படுத்தி, பல பொருட்கள் வந்துள்ளது போல், வெளியுலக வேலைகளை எளிமைப்படுத்துவது, இந்த இரண்டுசக்கர வாகனம்தான்.
அதிலும், இரண்டு சக்கர வாகனம் இயக்க தெரிந்த மகளிர் பலருக்கு, இப்போதெல்லாம் புல்லட் மீது ஒரு ஈர்ப்பு கட்டாயம் இருக்கிறது. ஆடவர்கள் மட்டுமல்ல, பெண்களும் புல்லட் வாகனம் யாரேனும் ஓட்டி சென்றால், ரசிக்கத்தான் செய்கின்றனர்.
ஆனால், புல்லட் வண்டியின் எடை, அதை ஓட்டுவதில் சிரமம் என பலர், பெண்கள் முயற்சிப்பதே இல்லை. இதுபோன்ற மகளிருக்கு, எளிமையாக ஒரே நாளில் புல்லட் ஓட்ட பயிற்சி அளிக்கிறார் திருச்சியை சேர்ந்த ரோசினி.
கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த, ஏழு பேர் இவரிடம் ஆர்வமாக பயிற்சி எடுக்கின்றனர். வாகனத்தை ஓட்ட சொல்லித்தரும் முன், பேலன்சிங் செய்ய பயிற்சி அளிக்கிறார். அதன் பின்னரே, இயக்குவது குறித்து பயிற்சியை ஆரம்பிக்கிறார்.
கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில், மகளிருக்கு புல்லட் பயிற்சி அளித்துக்கொண்டு இருந்த ரோசினியை சந்தித்தோம்...!
''கல்லுாரி காலங்களில் ஆண்கள் ஓட்டும் வாகனங்களை, எளிதாக இயக்குவேன். கல்யாணம் ஆன பின், ஏதோ ஒருவித அச்சம் காரணமாக, கார் ஓட்ட துவங்கிவிட்டேன். ஆனால், பைக் ஓட்டவேண்டும் என்ற ஆசை, என்னை துரத்திக்கொண்டே இருந்தது.
ஒரு கட்டத்தில், அச்சத்தில் இருந்து வெளிவர வேண்டும் என்பதற்காக ஓட்ட துவங்கினேன். என்னை சுற்றி பல மகளிர், தங்களுக்கும் புல்லட் வண்டி ஓட்ட வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தினர். ஆனால், அவர்களுக்கு நேரம் அமைவதில்லை.
அதன் பின்னரே, ஒரு ஸ்டார்ட்-அப் ஆக எடுத்து, செய்ய துவங்கி பயிற்சி அளிக்க துவங்கினேன். ராயல் என்பீல்ட் அனைவருக்கும் பிடிக்கும் என்பதால், அதை தேர்வு செய்து கொண்டேன். பல பெண்கள் ஆர்வத்துடன் பயிற்சி எடுத்து செல்கின்றனர்,'' என்றார்.

