தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/என்று தீரும் பாரதியார் பல்கலை. நில விவகாரம்?

என்று தீரும் பாரதியார் பல்கலை. நில விவகாரம்?

என்று தீரும் பாரதியார் பல்கலை. நில விவகாரம்?


UPDATED : அக் 26, 2026 09:43 PM

ADDED : அக் 26, 2026 09:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2026 09:43 PM ADDED : அக் 26, 2026 09:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வடவள்ளி: ஒரு சிக்கலில் இருந்து மீண்டதும் அடுத்த பிரச்னையில் சிக்குவது என்ற நிலை தொடரும்போது, அதை நச்சுச்சுழல் என்பார்கள். பாரதியார் பல்கலைக்கழக நில விவகாரம் அப்படி ஒரு சுழலில் சிக்கி உள்ளது. 40 ஆண்டுகளுக்கு மேல் நடக்கும் இந்த போராட்டம், இப்போது இன்னுமொரு திருப்பு முனையில் நுழைந்துள்ளது.

விவகாரம் ஒரு வழியாக முடிவை நெருங்கி விட்டது என்று சம்பந்தப்பட்ட மக்கள் நிம்மதி பெருமூச்சு விடும்போது ஏற்பட்டுள்ள புது பிரச்னை அவர்களின் கவலைக்கு உரமிட்டுள்ளது.

முன்கதை சுருக்கம்: மருதமலை அடிவாரத்தில், இயற்கை எழில் சூழ அமைந்துள்ளது பாரதியார் பல்கலை. இதை அமைப்பதற்காக, 1977 முதல் 1986ம் ஆண்டு வரை, அரசு நிலம் எடுத்தது. 1,150 பேரிடமிருந்து 926 ஏக்கர் பட்டா நிலம் எடுத்தது. புறம்போக்கு நிலம் 146 ஏக்கர் சேர்த்தது.

எடுத்த நிலத்துக்கு அரசு நிர்ணயம் செய்த இழப்பீடு ஒரு சென்டுக்கு ரூ.33 முதல் ரூ.85 வரை. ஏக்கருக்கு 3,300 முதல் 8,500 வரை. இது அற்ப தொகை; ஏற்க முடியாது என்றனர் விவசாயிகள்.

வழக்கு போட்டனர். அவர்கள் கேட்பதில் நியாயம் உள்ளதாக 1997ல் கோவை கோர்ட் அறிவித்தது. 164 கோடி வழங்க சொன்னது. அரசு ஏற்கவில்லை. அப்பீல் செய்தது. அது இழுத்து கொண்டே போனது. அதனால், இடைக்கால வட்டியாக 43 கோடி வழங்க 2013ல் அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டது.

ஐகோர்ட் 2022ல் ஒரு உத்தரவு பிறப்பித்தது. கோவை கோர்ட் சொன்னது சரிதான்; அப்போதே அரசு கொடுத்திருக்கலாம்; இன்று வட்டியுடன் தொகை 400 கோடி ஆகிவிட்டது என்று. 164 க்கே முடியாது என்ற அரசு 400 எப்படி தரும்? மீண்டும் அப்பீல்.

நாற்பது ஆண்டு சட்ட போராட்டத்தின் மத்தியில், நிலம் கொடுத்த பலர் மேலே போய்விட்டார்கள். நீதிபதிகள் கடுப்பாகி, பாரதியார் பல்கலைக்கழக நிர்வாகத்தை விவசாயிகளுடன் பேசி தீர்வு காண உத்தரவிட்டனர்.

அதன் பிறகு தி.மு.க., அரசு, ரூ.164 கோடி இழப்பீடு வழங்க அரசாணை வெளியிட்டது. ஆனால் ஒரு நிபந்தனை: வழக்குகளை விவசாயிகள் வாபஸ் பெற வேண்டும்; மீண்டும் கோர்ட்டுக்கு போக கூடாது!

இதோடு நிற்கவில்லை. சும்மா கிடந்த 196 ஏக்கரை பல்கலைக்கழகத்திடம் இருந்து அரசு எடுத்துக் கொண்டது. அதை டிட்கோ என்கிற தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்துக்கு கொடுத்து, அதற்கு விலையாக கிடைக்கும் 164 கோடியை விவசாயிகளுக்கு கொடுக்க ஆணை பிறப்பித்துள்ளது.

அந்த நிலத்தில் மாசு ஏற்படுத்தாத தொழிற்சாலைகள் மட்டுமே அமைக்க வேண்டும் என்று அரசாணை சொல்கிறது. இது தான் புது சிக்கல் உருவான கதை.

கல்விக்காக எடுத்த நிலத்தை, வணிக நோக்கம் கொண்ட ஆலைகள் அமைக்க கொடுப்பதா? என எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

நிலம் கொடுத்தவர்கள் கூட்டமைப்பின் தலைவர் கணேசன் சொல்கிறார்: ”பல தலைமுறையாக விவசாயம் செய்து வந்த நிலத்தை, கட்டாய நிலம் எடுப்பு சட்டத்தின் கீழ், தமிழக அரசு எடுத்தது. 45 ஆண்டு கடந்தும் இழப்பீடு தரவில்லை. எங்கள் நிலத்தில் பெரிய குட்டை இருந்தது. பல்கலை கழகம் அதை மண் கொட்டி மூடிவிட்டது. கல்விக்காக என்பதால் தான் நிலங்களை கொடுத்தோம். ஆலைகள் அமைத்து தனியார் லாபம் சம்பாதிக்க நாங்கள் ஏன் நிலம் தர வேண்டும்? யானை வழித்தடம் எனக்கூறி, 77 ஏக்கரை வனத்துறைக்கு கொடுக்க இருக்கிறது பல்கலை கழகம். இந்த நீதியை எப்படி ஏற்க முடியும்?”

மருதமலை ஐ.ஓ.பி. காலனி குடியிருப்போர் சங்க நிர்வாகி ஹரிஹரன் கூறுவது இது: இயற்கை எழில் சூழ்ந்த பகுதி என்பதால் இங்கே குடியேறினோம். ஏற்கனவே போக்குவரத்து அதிகரித்துள்ளது. ஆலைகள் அமைத்தால் மொத்த சூழலும் மாறிவிடும். வனவிலங்குகள் வீடு தேடி வரும்.

தமிழக அரசு தேவையின்றி பிரச்னைக்குள் குதிப்பதாக பா.ஜ. சொல்கிறது. கோவை மாநகர் மாவட்ட பா.ஜ. தலைவர் ரமேஷ் குமார் சொல்கிறார்:

பாரதியார் பல்கலை கழகம் அமைப்பதாக சொல்லி தான் அரசு நிலம் எடுத்தது. அந்த நிலத்தில் கொஞ்சம் அண்ணா பல்கலை.க்கும் வேறு கல்வி நிறுவனத்துக்கும் கொடுத்தபோது மக்கள் எதிர்க்கவில்லை. கல்வி நோக்கம் என்பதால்.

ஆனால் ஆலை அமைக்க டிட்கோவுக்கு நிலத்தை மாற்றுவது தலைகீழ் மாற்றம். இதை ஏற்கவே முடியாது. நில மாற்று உத்தரவை அரசு திரும்ப பெற வேண்டும்.

தவறினால், விவசாயிகள், கல்வியாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்களை இணைத்து பெரும் போராட்டத்தை முன்னெடுப்போம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us