/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுடுகாட்டில் வாகன பணிமனை யா? துாய்மை வாகன டிரைவர்கள் தர்ணா
/
சுடுகாட்டில் வாகன பணிமனை யா? துாய்மை வாகன டிரைவர்கள் தர்ணா
சுடுகாட்டில் வாகன பணிமனை யா? துாய்மை வாகன டிரைவர்கள் தர்ணா
சுடுகாட்டில் வாகன பணிமனை யா? துாய்மை வாகன டிரைவர்கள் தர்ணா
ADDED : அக் 23, 2025 11:34 PM

கோவை: கோவை மாநகராட்சியில் தூய்மை பணிக்கு பயன்படுத்தும் வாகனங்களை சுடுகாட்டில் நிறுத்த வலியுறுத்துவதை கண்டித்து, மாநகராட்சி ஒப்பந்த டிரைவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தர்ணா செய்தனர்.
கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட ஜே.ஜே. திருமண மண்டப வளாகத்திலும், மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி மைதானத்திலும் மாநகராட்சி துாய்மைப்பணி வாகனங்களை நிறுத்தி வந்தனர். அங்கேயே வாகன பழுது நீக்கும் வேலைகளையும் செய்து வந்தனர். இந்நிலையில், துாய்மைப்பணி ஒப்பந்தம் எடுத்துள்ள சீனிவாசா மேனேஜ்மென்ட் நிறுவனம், கிழக்கு மண்டலத்தில் உள்ள காளப்பட்டி சுடுகாட்டில் வாகனங்களை நிறுத்துமாறு மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியதாக கூறி, அவ்வாறே நிறுத்துமாறு டிரைவர்களுக்கு உத்தரவிட்டது.
திறந்தவெளி சுடுகாட்டில் வாகனங்களை நிறுத்தவும், அங்கேயே உணவு அருந்துவது வாகன பழுது நீக்குவது போன்றவற்றை முடித்துக் கொள்ளவும் அதிகாரிகள் கூறியதற்கு, நான்கு டிரைவர்கள் பலமான எதிர்ப்பு தெரிவித்தனர். ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக அந்த டிரைவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இதை கண்டித்து மற்ற டிரைவர்கள் போராட்டத்தில் குதித்தனர். சுடுகாடு பார்க்கிங் தவிர, திடக்கழிவை அகற்ற போதுமான உபகரணங்கள் வழங்குவதில்லை என்பது உட்பட வேறு சில கோரிக்கைகளையும் அவர்கள் தெரிவித்தனர்.
பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி நேற்று ஐம்பதுக்கு மேற்பட்ட மாநகராட்சி ஒப்பந்த டிரைவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

