/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்களுக்கு ஓட்டுரிமை பெற்று தருவது கட்சியினரின் கடமை
/
மக்களுக்கு ஓட்டுரிமை பெற்று தருவது கட்சியினரின் கடமை
மக்களுக்கு ஓட்டுரிமை பெற்று தருவது கட்சியினரின் கடமை
மக்களுக்கு ஓட்டுரிமை பெற்று தருவது கட்சியினரின் கடமை
ADDED : நவ 12, 2025 10:55 PM

சூலுார்: 'மக்களுக்கு ஓட்டுரிமை பெற்று தருவது அரசியல் கட்சியினரின் கடமை,' என, கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி வலியுறுத்தினார்.
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி அனைத்து தொகுதிகளிலும் தீவிரமடைந்துள்ளன. சூலுார் சட்டசபை தொகுதியில் இப்பணி வேகமாக நடந்து வருகிறது. ஓட்டு சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று படிவங்களை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் சூலுார் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் பழனிக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
கட்சி பிரதிநிதிகள் பேசுகையில்,' மக்களுக்கு படிவங்கள் வழங்குவதை தீவிரப்படுத்த வேண்டும். அதற்கு கூடுதலாக ஊழியர்களை நியமிக்க வேண்டும். பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தி படிவங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சி பிரதிநிதிகளே படிவங்களை கொடுக்க அனுமதிக்க வேண்டும்,' என்றனர்.
சூலுார் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி ஜெகநாதன் பேசியதாவது:
தொகுதியில் வாக்காளர் பட்டியல் திருத்த பணி தீவிரமாக நடக்கிறது. ஓட்டுகள் அதிகமாக இருக்கும் ஓட்டு சாவடிகளுக்கு, கூடுதலாக நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வீடு, வீடாக சென்று படிவங்கள் வழங்க வேண்டும் என்பது தேர்தல் கமிஷனின் உத்தரவு ஆகும். ஓட்டு சாவடி நிலை அலுவலர்களுடன், கட்சி பூத் ஏஜெண்ட்டுகள் சென்று உதவி செய்யலாம். படிவங்களை நிலை அலுவலர் மட்டுமே வாக்காளர்களிடம் வழங்க வேண்டும். படிவங்களை எப்படி பூர்த்தி செய்வது என்பது குறித்து மக்களுக்கு பூத் ஏஜெண்ட்கள் உதவி செய்யலாம். மக்களுக்கு ஓட்டுரிமை பெற்று தருவது அரசியல் கட்சியினரின் கடமை ஆகும். அதனால், இப்பணியில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.

