/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் 4 மணி நேரம் கனமழை கொட்டித்தீர்த்தது! கழிவுநீர் தேக்கத்தால் மக்கள் அவஸ்தை!
/
கோவையில் 4 மணி நேரம் கனமழை கொட்டித்தீர்த்தது! கழிவுநீர் தேக்கத்தால் மக்கள் அவஸ்தை!
கோவையில் 4 மணி நேரம் கனமழை கொட்டித்தீர்த்தது! கழிவுநீர் தேக்கத்தால் மக்கள் அவஸ்தை!
கோவையில் 4 மணி நேரம் கனமழை கொட்டித்தீர்த்தது! கழிவுநீர் தேக்கத்தால் மக்கள் அவஸ்தை!
ADDED : அக் 08, 2024 12:38 AM

கோவை : கோவையில் நேற்று மாலை பெய்த கனமழையால், சாலைகளில் நீர் தேங்கியது. அரசு மருத்துவமனையின் உள்ளே சாக்கடைநீர் கலந்த மழைநீர் புகுந்தது. நோயாளிகள் அவஸ்தைப்பட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதோ, இதோ என போக்கு காட்டி வந்த வடகிழக்கு பருவமழை, கடந்த இரு நாட்களாக கோவையை நனைத்து வருகிறது. நேற்று மாலையில், தொடர்ந்து நான்கு மணி நேரம் தொடர்ந்து மழை தட்டியெடுத்தது.
சாதாரணமாக மாநகரில் கனமழை பெய்தால், லங்கா கார்னர், அவிநாசி மேம்பாலத்தின் கீழ் பகுதி, வடகோவை மேம்பாலத்தின் கீழ் பகுதியில், மழைநீர் தேங்கி நிற்கும். மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட பணிகள் காரணமாக, வழக்கமாக மழை நீர் தேங்கும் பகுதிகளில், நேற்று இரவு மழை நீர் தேங்கவில்லை.
ரயில்வே ஸ்டேஷன் சாலையில், மழைநீர் வடிகாலில் ஏற்பட்டிருந்த அடைப்பு காரணமாக, சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு, 2 அடிக்கும் மேல் மழை நீர் தேங்கியிருந்தது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
ரயில்வே ஸ்டேஷன் சாலையில் முழங்கால் அளவு வெள்ளம் தேங்கியதால், ரயிலை பிடிக்கச் சென்ற பயணிகள், உள்ளே செல்ல முடியாமல் தவித்தனர்.
108 ஆம்புலன்ஸ்கள் சிக்கித் தவித்தன. போலீசார் போக்குவரத்தை சீர் செய்ததால், வாகனங்கள் மெல்ல மெல்ல நகர்ந்து சென்றன. நகரின் தாழ்வான பகுதிகளில், சாக்கடை நீருடன் கலந்து மழை நீர் தேங்கி நின்றது.
கோவை அரசு மருத்துவமனை தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதால், மழை காலங்களில் மழை நீர் மருத்துவமனை வளாகத்திற்குள் புகுந்து விடும். இதையடுத்து பழைய நுழைவாயில் பகுதியில் மழை நீர் புகுந்து விடாமல் இருக்க, அந்த பகுதி உயர்த்தி தளம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று மாலை பெய்த மழையால், அரசு மருத்துவமனை கேன்டீன் உள்ள பகுதியில் மழை நீர் தேங்கியது. அந்த மழை நீர், சாக்கடை கழிவு நீருடன் எம்.எம்., 4 வார்டுக்குள் புகுந்தது.
நோயாளிகளின் படுக்கை வரை, சாக்கடை நீர் சென்றதால் கடும் துர்நாற்றம் வீசியது. நோயாளிகள் சிரமத்திற்குள்ளாகினர். மருத்துவமனை பணியாளர்கள், தண்ணீரை வெளியேற்றி சுத்தம் செய்தனர்.
கட்டுப்பாட்டு மையம் துவக்கம்!
வடகிழக்கு பருவமழை பேரிடரை சமாளிக்க, கலெக்டர் அலுவலகத்தில் அவசர கட்டுப்பாட்டு மையத்தை, மாவட்ட நிர்வாகம் திறந்துள்ளது.
இது குறித்து, கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை:
கோவையில் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, பேரிடர் காலங்களில் மக்கள் தொடர்பு கொள்ளும் வகையில், 1077 என்ற தானியங்கி தொலைபேசி எண்ணும், 0422-2301114 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் 24 மணி நேரமும் இயங்கும் அவசர கட்டுப்பாட்டு மையமும், கலெக்டர் அலுவலகத்தில் துவங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் முழுக்க, தாலுகா வாரியாக துணை கலெக்டர் அந்தஸ்தில் கண்காணிப்பு குழுக்கள் அமைத்து, கண்காணிக்கப்பட்டு வருகிறது. பல துறை அலுவலர்கள் அடங்கிய, மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பேரிடர் காலங்களில், மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏதுவாக, 66 நிவாரண முகாம்கள் தயார்நிலையில் உள்ளன.
இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.