பட்டாசு வெடிக்கும் போது செல்லப்பிராணிகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்
பட்டாசு வெடிக்கும் போது செல்லப்பிராணிகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்
UPDATED : நவ 07, 2026 01:47 PM
ADDED : நவ 07, 2026 01:44 PM
தீபாவளியின்போது பட்டாசு சத்தம், புகை, இனிப்புகள் ஆகியவை செல்லப்பிராணிகளுக்கு அதிக பயத்தையும் ஆபத்தையும் உண்டாக்கும். ஆகவே என்னென்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என அறிவுறுத்துகிறார் கால்நடை மருத்துவர் இளங்கோ.
- * பட்டாசு வெடிக்கும் நேரத்தில் நாய், பூனைகளை வீட்டுக்குள்ளேயே வைத்திருங்கள். கதவு, ஜன்னல்களை மூடி, திரைச்சீலைகளை இழுத்துவிடுங்கள்.
- * அமைதியான, இருட்டான அறையில் அவற்றுக்குப் பிடித்த படுக்கை, பொம்மைகள், தண்ணீர் வைத்துப் பாதுகாப்பான இடம் அமைத்துக் கொடுங்கள்.
- * டிவி அல்லது மெல்லிய இசையை ஒலிக்க விட்டு, பட்டாசு சத்தம் அவற்றை பாதிக்காமல் தடுக்கலாம்.
* பட்டாசு வெடிக்கும் நேரத்தில் வெளியே கூட்டிச் செல்ல வேண்டாம். வெளியே அழைத்துச் செல்வதைப் பட்டாசு வெடிப்பதற்கு முன்பே, அதிகாலையிலேயே முடித்துவிடுங்கள்.
*- தெருநாய், பூனைகள் அருகில் கண்டிப்பாக பட்டாசு வெடிக்காதீர்கள். பயத்தில் செல்லப்பிராணிகள் ஓடிப்போகலாம். அதனால் கழுத்துப்பட்டையில் உரிமையாளரின் போன் எண் எழுதிய அடையாளச் சீட்டு அல்லது மைக்ரோசிப் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
*- பண்டிகையின் போது நாம் அதிகம் சாப்பிடும் இனிப்பு, சாக்லேட் ஆகியவற்றைச் செல்லப்பிராணிகளுக்குக் கொடுக்க வேண்டாம். அது அவைகளுக்கு உயிர்க்கொல்லி நச்சாக மாறும் வாய்ப்பு மிகவும் அதிகம்.
- * எண்ணெயில் பொரித்த பலகாரங்களால் வாந்தி, வயிற்றுப்போக்கு, கணையத்தில் வீக்கம் ஆகியவை வரலாம்.
-* வெடிக்காத பட்டாசுகளில் உள்ள ரசாயனங்கள் (பொட்டாசியம் நைட்ரேட், கந்தகம் போன்றவை) நாய்கள் கடித்தால் வாய், உணவுக்குழாய் பாதிக்கப்படும்.
-* அகல் விளக்கு, மெழுகுவர்த்தி, ஊதுபத்தி ஆகியவற்றைப் பிராணிகள் தட்டிவிடாதபடி உயரமான இடத்தில் வையுங்கள்.
-* அதிகம் பயப்படும் பிராணிகளைப் பண்டிகைக்கு முன்பே கால்நடை மருத்துவரிடம் காட்டி ஆலோசனை பெறுங்கள். தேவைப்பட்டால் மருத்துவர் வலிப்பு/பயம் குறைக்கும் மருந்துகளைக் கொடுப்பார். மனிதர்களுக்கான மருந்துகளை நீங்களாகவே கொடுக்காதீர்கள்.
-* பட்டாசால் தீக்காயம், கண்/காது பாதிப்பு, நஞ்சு சாப்பிடுதல் ஏற்பட்டால் உடனே அருகிலுள்ள கால்நடை மருந்தகம் அல்லது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள்.
- * நடுக்கம், மூச்சு வாங்குதல், அதிகமாக எச்சில் ஒழுகுதல், ஒளிந்து கொள்ளுதல், விடாமல் குரைத்தல், சாப்பிட மறுத்தல், சிறுநீர்/மலம் கழித்துவிடுதல் போன்றவை தெரிந்தால், அவற்றை உடனே அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையை அணுகுங்கள்.
-* மாடு, ஆடு போன்ற கால்நடைகளைப் பட்டாசு சத்தம் கேட்காத, பாதுகாப்பான கொட்டகையில் கட்டி வையுங்கள்.
