/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மொழியை தெரிந்துகொள்வது வேறு; திணிப்பது வேறு: மெட்ரிக் பள்ளிகள் சங்க பொதுச் செயலாளர் கருத்து
/
மொழியை தெரிந்துகொள்வது வேறு; திணிப்பது வேறு: மெட்ரிக் பள்ளிகள் சங்க பொதுச் செயலாளர் கருத்து
மொழியை தெரிந்துகொள்வது வேறு; திணிப்பது வேறு: மெட்ரிக் பள்ளிகள் சங்க பொதுச் செயலாளர் கருத்து
மொழியை தெரிந்துகொள்வது வேறு; திணிப்பது வேறு: மெட்ரிக் பள்ளிகள் சங்க பொதுச் செயலாளர் கருத்து
ADDED : பிப் 21, 2025 07:06 AM

கோவை : ''மொழியை தெரிந்துகொள்வது என்பது வேறு; திணிப்பது என்பது வேறு,'' என, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் நலச்சங்க மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணராஜ் கூறினார்.
அவர் நம்மிடம் கூறியதாவது:
இன்றைய பாடத்தில் இரு மொழிக் கொள்கையா, மும்மொழி கொள்கையா என்று நாம் கேட்போமானால், 'ஆப்ஷனல்' எனும் விருப்பப் பாடத்திட்டம் அவசியாக உள்ளது. தாய்மொழிக் கல்வி அறிவுடன், தொடர்புடைய ஆங்கில மொழி இருந்தாலும்கூட, இரு மொழியை கட்டாயம் காப்பாற்றியாக வேண்டும்.
அதேநேரத்தில், பொது மக்கள் விரும்பும் விருப்ப பாடமான ஜெர்மன், பிரெஞ்ச் என, எந்த மொழிப்பாடமாக இருந்தாலும், அதை படித்தால்தான் குழந்தைகள் எளிதில் வெளிநாடு சென்று வேலை வாய்ப்பு பெறமுடியும். இங்கு படிக்கும் அத்தனை பேருக்கும் வேலை வாய்ப்பு என்பது குதிரை கொம்பாக உள்ளது.
இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் வெளிநாடுகளை நாடி படிக்கவும், வேலைக்கும் இளைஞர்கள் செல்கின்றனர். எனவே, மூன்றாவது மொழிப்பாடம் வேண்டும். இங்கு தாய்மொழிக் கல்வி அறிவுடன், விருப்ப பாடமும் அவசியம்.
நம்முடைய மொழியில் இருக்கும் கருத்துக்களை எல்லாம் மற்ற மொழிகளுக்கு கொண்டு செல்ல, அந்த மொழி அறிவு தேவை. இன்றைக்கு வெளி நாட்டினர் எல்லாம் தமிழ் கற்று இங்கு வருகின்றனர் என்றால் அவர்களிடம் இருக்கும் மொழி அறிவுதான்.
அதுபோல்தான் தமிழகத்தில் கருவறை முதல் கல்லறை வரை தாய்மொழி அவசியம்தான். இன்று அரசுப் பள்ளிகளில் ஆங்கிலக் கல்வி வந்துவிட்டது. இரு மொழி மட்டும் இருப்பதால் சாதாரண வீட்டு குழந்தைகளுக்கு மூன்றாவது மொழி வெற்றிடமாக இருக்கிறது.
பெற்றோர்கள் விரும்பி செல்வதால் விருப்ப மொழிப்பாடத்தை தவிர்க்க முடியாது. ஹிந்தி மொழி இன்று புழக்கத்தில் இருக்கிறது. மொழியை தெரிந்துகொள்வது என்பது வேறு; திணிப்பது என்பது வேறு. எனவே, மும்மொழிக் கல்வி அவசியமானது.
இவ்வாறு, அவர் கூறினார்.