/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மண்ணின் நீர் உறிஞ்சும் தன்மையை அறிவது அவசியம் பாதுகாப்பை உறுதிசெய்ய உதவும் 'மண் பரிசோதனை'
/
மண்ணின் நீர் உறிஞ்சும் தன்மையை அறிவது அவசியம் பாதுகாப்பை உறுதிசெய்ய உதவும் 'மண் பரிசோதனை'
மண்ணின் நீர் உறிஞ்சும் தன்மையை அறிவது அவசியம் பாதுகாப்பை உறுதிசெய்ய உதவும் 'மண் பரிசோதனை'
மண்ணின் நீர் உறிஞ்சும் தன்மையை அறிவது அவசியம் பாதுகாப்பை உறுதிசெய்ய உதவும் 'மண் பரிசோதனை'
ADDED : நவ 22, 2024 11:15 PM

எனது வீடு கடந்த, 1987ம் ஆண்டு கட்டப்பட்டது. 15 படிகள் வெளிப்புறம் உள்ள நிலையில் கைப்பிடிகள் அனைத்தும் 'அலுமினியம் பிட்டிங்' செய்யப்பட்டுள்ளது. இந்த படிகளின் ஓரம் முழுவதும் அரை அடி ஆழம் கீழே இருந்து வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது. அடிப்பகுதியில் சில இடங்களில் கம்பிகள் வெளியே தெரிகின்றன. அடுத்த மாடியிலும் படிக்கட்டிலும் ஆங்காங்கே வெடிப்புகள் எழுகின்றன. இதை சரி செய்வது எப்படி?
-மருதாசலம், ராமநாதபுரம்.
உங்கள் வீட்டின் படிக்கட்டில் கான்கிரீட்டில் உள்ள கம்பிகள் துருப்பிடித்து அதன் தன்மையை இழப்பதால்தான் இந்த வெடிப்புகள் வருகின்றன. மேலும், அக்கால கட்டத்தில் முறுக்கு கம்பிகள் பயன்படுத்தாமல் இருந்திருக்கலாம். மற்றும் கம்பிகளுக்கு 'கவர் பிளாக்' சரியாக வைக்காமலும் கான்கிரீட் போடுவதால், இவ்வாறு விரிசல்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதற்கு வலை(மெஸ்) வைத்து கால் இன்ச் சிப்ஸ் ஜல்லி பயன்படுத்தி, 1:3 விகிதத்தில் கலவையால் பூசினால் போதுமானது. ஆனால், இது நிரந்தர தீர்வு அல்ல. கட்டடத்தின் ஆயுட்காலம், 37 ஆண்டுகள் ஆகிவிட்டது. நீங்கள் கூறுவதன்படி கம்பிகள் வெளியே தெரிவதால், மழைக்காலத்தில் அதிகம் துருப்பிடித்து இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, கட்டடத்தை ஒரு பொறியாளரை வைத்து நன்கு ஆராய்ந்துவிட்டு புனரமைப்பு செய்வதா அல்லது இடித்துவிட்டு புதிதாக கட்டுவதா என்பதை முடிவு செய்துகொள்ளலாம்.
நான் சுமார், 2000 சதுர அடியில் கட்டடம் கட்ட திட்டமிட்டுள்ளேன். அதற்கு மண் பரிசோதனை செய்வது மிகவும் முக்கியமா?
-அன்வர், சுந்தராபுரம்.
ஆம். மண் பரிசோதனை செய்வது மிகவும் முக்கியமானது. இதனால் உங்கள் கட்டடத்தின் நிலைத்தன்மை பாதுகாப்பு உறுதிசெய்யப்படும். மண் பரிசோதனை செய்வதால் மண் தாங்கும் திறனை அறியலாம். இதன் அடிப்படையில் நீங்கள் அஸ்திவாரம் அமைக்கும் ஆழம் குறித்தும் தேர்வு செய்யலாம். மண்ணின் நீர் உறிஞ்சும் தன்மையை மதிப்பீடு செய்வது முக்கியம். இது மழைநீரை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை தீர்மானிக்க உதவும். களிமண், மணல், கற்பாறை என மண்ணின் வகையை அறிந்துகொண்டு அதற்கேற்ப கட்டுமான முறையை தீர்மானிக்கலாம். நீர் மட்ட நிலை(வாட்டர் டேபிள்) அடிப்படை பணி செய்யும்போது நிலத்தடி நீர் மட்டம் பிரச்னையாக இருக்குமா என்பதை அறியலாம். பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அஸ்திவாரம் மற்றும் கட்டுமானம் குறித்த முடிவுகளை எடுக்கலாம். இது கட்டட திட்டத்திற்கும், செலவுகளை குறைக்கவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மிக முக்கியமாகும்.
சமீபத்தில் நாங்கள் கட்டிக்கொண்டிருக்கும் வீட்டின் தரைதளத்தின் கூரைக்கும் கான்கிரீட் போட்டபோது, பொறியாளர் கான்கிரீட் மாதிரியை எடுத்து வைத்தார். அந்த மாதிரியை ஆய்வுக்கூடத்தில் பரிசோதனை செய்தபோது போதுமான அளவு வலிமை இல்லை என்ற ஆய்வறிக்கை வந்தது. இதனால் என் மேற்கூரை பாதிக்கப்படுமா?
-முனுசாமி, உப்பிலிபாளையம்.
பொதுவாக கான்கிரீட் மாதிரிகளை ஏழாம் நாள் மற்றும் 28ம் நாள் ஆய்வகத்தில் பரிசோதனை செய்வார்கள். உங்கள் கட்டடத்தின் ஏழாம் நாள் பரிசோதனைக்கு பின்பு போதுமான அளவு வலிமை அமையவில்லை என்கிறீர்கள். எனினும், 28ம் நாள் வரை பொறுத்திருங்கள். ஏனெனில், உங்கள் கட்டடத்தில் பயன்படுத்தப்பட்ட கான்கிரீட்டில் ஏதோ ஒரு காரணியானது மெதுவாக வலிமை அடையக்கூடிய தன்மையுடையதாக இருக்கலாம். எனவே, 28ம் நாளன்று ஆய்வகத்தில் பரிசோதனை செய்த பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கலாம். அதன்பிறகும், வலிமை அடையாத பட்சத்தில் முதலில் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள 'நான் டெஸ்டிரக்டிவ்'(என்.டி.டி.,) சோதனை செய்துகொள்ளலாம். இதன் வாயிலாக கட்டடத்தின் துல்லியமான தன்மையை அறிந்துகொள்ள முடியும். வலிமைத்தன்மை அடையாத பட்சத்தில் மறுசீரமைப்பு முறையில் கான்கிரீட்டின் தாங்கும் தன்மையை பலப்படுத்தலாம். இது, உங்கள் கான்கிரீட்டின் தன்மையை உறுதிப்படுத்த உதவும்.

