கிருஷ்ணா இது குளமா ... குப்பை கூளமா? என்ன இது அவலம்
கிருஷ்ணா இது குளமா ... குப்பை கூளமா? என்ன இது அவலம்
ADDED : நவ 09, 2026 04:11 AM

கோவை: மாநகரில் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், குமாரசாமி குளம், கிருஷ்ணம்பதி குளம், செல்வசிந்தாமணி குளம், சிங்காநல்லூர் குளம், குறிச்சி குளங்கள் உள்ளன.
பரபரப்பான வாழ்க்கை முறையில், மாநகரில் உள்ள குளங்கள் உயிர்ச்சூழலை காப்பகதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குளக்கரைகளை மேம்படுத்தினாலும், குளத்தை முறையாக பராமரிப்பதில்லை.
கழிவுநீரும், பிளாஸ்டிக்குமே குளங்களை ஆக்கிரமித்துள்ளன. கழிவுநீர் செல்வதை தடுக்க அமைத்த சுத்திகரிப்பு நிலையங்கள் சரியாக இயங்குவதில்லை. அதை சரி செய்யாமல், குளக்கரைகளில் வணிக நடவடிக்கையை ஊக்குவித்து வருகிறது மாநகராட்சி.
நொய்யலை இணைக்கும் குளங்களில் தற்போதைய நிலையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
கிருஷ்ணம்பதி குளம் 61 ஏக்கர் பரப்பில் உள்ளது. சமீபத்தில் பெய்த மழையில் குளத்துக்கு நீர்வரத்து அதிகரித்தது. கூடவே பல்வேறு பகுதிகளில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளும் அழையா விருந்தாளியாக குவிந்துள்ளன.
பருந்து பார்வையில் பார்த்தால், இது குளமா அல்லது குப்பை கூளமா என கேட்குமளவுக்கு பிளாஸ்டிக் குப்பை சேர்ந்துள்ளது. பருவமழைக்கு முன்பே குளங்கள், வாய்க்கால்களை மாநகராட்சி முழுமையாக தூர் வாரியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது.
பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி, மேற்கொண்டு பிளாஸ்டிக் சேராமல் இருக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
