ADDED : ஜூலை 02, 2025 09:48 PM

குணசேகரன், பொள்ளாச்சி: பொள்ளாச்சி தேர்நிலையம் மார்க்கெட் புதிதாக கட்டப்பட்டுள்ளது. பயன்பாட்டுக்கு விடப்படும் வரை, தெப்பக்குளம் பள்ளி வளாகத்தில் மார்க்கெட் செயல்படுகிறது. தற்போது கட்டடம் கட்டப்பட்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரவில்லை. முதலில் கடை வைத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கி, டெபாசிட் தொகையை குறைத்து வழங்க, நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்.தற்போது, கோட்டூர் ரோடு பள்ளி வளாகத்தில் மார்க்கெட் செயல்படுகிறது. அங்கு, மழைநீர் தேங்கி நிற்பதால், மக்கள் வந்து செல்லவும், காய்கறி விற்பனை செய்யவும் சிரமமாக உள்ளது.
சிவா, வால்பாறை: வால்பாறையில் நகராட்சிக்கு சொந்தமான கடைகளில், பல ஆண்டுகளாக வாடகை அடிப்படையில் கடை நடத்தி வருகிறோம். ஆனால், மார்க்கெட் பகுதியில் நகராட்சி இடத்தை ஆக்கிரமிப்பு செய்து, எந்தவித வாடகையும் செலுத்தாமல் பலர் கடைகளை நடத்தி வருகின்றனர். பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும். மழை நீர் தேங்காமல் தடுக்கவும், பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ள கடைகளின் மேற்கூரையை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மவுன குருசாமி, மாநில செயலாளர், கிஷான் சங்கம், உடுமலை: உடுமலை சந்தையில், விவசாயிகள், மக்களுக்கு அடிப்படை வசதியில்லை. பெரிய அளவில் இருந்த சந்தை, மாற்று பயன்பாடுகளால் குறுகலாகி, வாகனங்கள் உள்ளே நுழைய முடியாத அளவுக்கு உள்ளது. ஏழு ஆண்டுகளாக இழுபறியாகும் கடைகள் கட்டுமான பணியால், மேலும் ஆபத்தானதாக மாறியுள்ளது. சந்தை வளாகம் முழுவதும், மாடு, ஆடு, கோழி, மீன் இறைச்சி கடைகள் நிரம்பியுள்ளதால், துர்நாற்றம் வீசுகிறது. சந்தையை இடமாற்றம் செய்ய வேண்டும். மடத்துக்குளத்தில், தேசிய நெடுஞ்சாலையில், வாரச்சந்தை, எந்த அடிப்படை வசதிகள் இல்லாமல், ஆபத்தான முறையில் செயல்பட்டு வருகிறது. அதே போல், காரத்தொழுவு, துங்காவி, கொங்கல்நகரம், போடிபட்டி, வாளவாடி கிராமங்களில், ஆபத்தான முறையில் வாரச்சந்தைகள் செயல்படுகின்றன.