/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'சிரிப்புதான் மன அழுத்தம் போக்கும் மருந்து'
/
'சிரிப்புதான் மன அழுத்தம் போக்கும் மருந்து'
ADDED : ஜூலை 21, 2025 11:02 PM

கோவை; கோவை நகைச்சுவை சங்கம் சார்பில், 'வாழ்வில் நகைச்சுவை' என்ற தலைப்பில், நகைச்சுவை சொற் பொழிவு நிகழ்ச்சி, நவஇந்தியா இந்துஸ்தான் கல்லுாரி அரங்கில் நடந்தது.
நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்து பேசியதாவது:
வெளிநாட்டில் 1980ம் ஆண்டு ஓர் ஆய்வு நடந்தது. அந்த ஆய்வில், நன்றாக சிரிப்பவர்களுக்கு புற்று நோய் வராது என்று கண்டுபிடித்துள்ளனர்.
உடல் வியர்வை வெளியேறாமல், உடலுக்கு சேமிப்பவர்ளுக்கு வியாதி வருகிறது. அதுபோல் ஒருவர் சிரிக்காமல் இருந்தால், மன அழுத்தம் அதிகமாகி, நோயாக மாறிவிடுகிறது.
அந்த காலத்தில் சில சித்தர்கள், யோகிகள் தனியாக அமர்ந்து தியானம் செய்தனர். ஆனால் இன்றைக்கு கூட்டம், கூட்டமாக அமர்ந்து தியானம் செய்கின்றனர். அந்த அளவுக்கு மக்களுக்கு பிரச்னைகளும், மன அழுத்தமும் அதிகமாகி இருக்கிறது. பி.பி., சுகர் போன்ற நோய்கள் இதனால்தான் வருகின்றன.
அதனால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், மனம் விட்டு சிரிக்க வேண்டும். மகிழ்ச்சியாக இருக்கும் சூழலை, நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். சிரிப்புதான் மன அழுத்தம் போக்கும் மருந்து. நத்தைக்கும், ஆமைக்கும் அதன் ஓடு, வாழும் காலம் முழுவதும் சுமையாக இருக்கிறது. ஆனால் அவை அதை சுமையாக நினைக்காமல், இயல்பாக வாழ்கிறது. அது போல் நாமும் சோகங்களை மறந்து, மகிழ்ச்சியாக வாழ பழகிக் கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

