/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டில் சிறுத்தை உலா; வனத்துறை எச்சரிக்கை
/
ரோட்டில் சிறுத்தை உலா; வனத்துறை எச்சரிக்கை
ADDED : ஜூலை 10, 2025 09:59 PM

வால்பாறை; பொள்ளாச்சி ரோட்டில் சென்ற சிறுத்தையால் வாகன ஓட்டுநர்கள் பீதியடைந்துள்ளனர்.
வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில், வனவிலங்குகள் அதிகளவில் நடமாடுகின்றன. குறிப்பாக, புலி, சிறுத்தை, காட்டுமாடு, வரையாடு, சிங்கவால்குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் ரோட்டோரத்திலேயே முகாமிடுகின்றன. இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள ரொட்டிக்கடை - அய்யர்பாடி ரோட்டில், இரவு நேரத்தில் சிறுத்தை நடந்து செல்வதை வாகனத்தில் சென்ற சுற்றுலா பயணியர் போட்டோ எடுத்துள்ளனர்.
வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் இரவு நேரத்தில் யானையை தொடர்ந்து சிறுத்தையும் நடமாடுவதால் வாகன ஓட்டுநர்கள் பீதியடைந்துள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த மலைப்பாதையில், வாகனங்களில் செல்வோர் கவனமாக இருக்க வேண்டும். வாகனத்தை விட்டு கிழே இறங்கி, வனவிலங்குகளை தொந்தரவு செய்யும் வகையில் போட்டோ எடுத்தால், வன உரியின பாதுகாப்பு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.
பச்சமலையில் அச்சம்
வால்பாறை அடுத்துள்ளது பச்சமலை எஸ்டேட் தெற்கு பிரிவில் வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த ஐந்து வயது சிறுமியை, கடந்த மாதம், 20ம் தேதி சிறுத்தை கவ்வி சென்றது. அதில், சிறுமி பலியானார். அதையடுத்து, வனத்துறையினர் வைத்த கூண்டில், கடந்த மாதம், 27ம் தேதி சிறுத்தை சிக்கியது. அந்த சிறுத்தை உலாந்தி வனச்சரகத்தில் விடுவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பச்சமலை எஸ்டேட் பகுதியில் மூன்று சிறுத்தைகள் குடியிருப்பு பகுதி அருகே நடந்து செல்வதை தொழிலாளர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்த வனத்துறையினரும் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
தொழிலாளர்கள் வீடுகளில் நாய், கோழி, பூனை வளர்க்க வேண்டாம். வீடுகளில் வெளியாகும் இறைச்சிக்கழிவுகளை திறந்தவெளியில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும். குடியிருப்பை சுற்றிலும் உள்ள புதரை அகற்ற வேண்டும்.
மாலை நேரத்தில் குழந்தைகளை வீட்டுக்கு வெளியில் விளையாட அனுமதிக்கூடாது, என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.