/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மா.கம்யூ., ரயில் மறியல் போராட்டம்
/
மா.கம்யூ., ரயில் மறியல் போராட்டம்
ADDED : மார் 15, 2024 12:38 AM

கோவை;ரயில்வே சுரங்க பாதை அமைக்காததை கண்டித்து மா.கம்யூ., கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை கணபதி செக்கான்தோட்டம், பாலன் நகர் இடையே அமைந்துள்ள ரயில்வே கேட்டை அகற்றி விட்டு பொதுமக்கள் சென்று, வர சுரங்க பாதை அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் துவங்கியது. இந்நிலையில் கடந்த, 3 வருடங்களாக சுரங்க பாதை பணிகள் நடைபெறாமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
சுரங்கபாதை பணிகளை விரைந்து முடிக்க கோரி ரயில்வே நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகின்றது.
இதையடுத்து ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து செக்கான் தோட்டம், பாலன் நகர் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து பொதுமக்களும், மார்க்., கம்யூனிஸ்ட் கட்சியினரும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், “ரயில்வே சுரங்கப்பாதை பணி துவங்கி, 3 ஆண்டுகளாக பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளது.
''தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ரயில்வே அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு இந்த பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும். அதுவரை இந்த பகுதியிலிருந்து செல்ல மாட்டோம்,” என்றனர்.
இது குறித்து போலீசார், ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

