/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இ-பைலிங் கட்டாயமாக்கினால் நீதித்துறை ஸ்தம்பிக்கும்: வக்கீல் சங்கம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
/
இ-பைலிங் கட்டாயமாக்கினால் நீதித்துறை ஸ்தம்பிக்கும்: வக்கீல் சங்கம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
இ-பைலிங் கட்டாயமாக்கினால் நீதித்துறை ஸ்தம்பிக்கும்: வக்கீல் சங்கம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
இ-பைலிங் கட்டாயமாக்கினால் நீதித்துறை ஸ்தம்பிக்கும்: வக்கீல் சங்கம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
ADDED : நவ 20, 2025 02:34 AM
கோவை: இ-பைலிங் வழக்கு தாக்கல் முறையினை கட்டாயமாக்கினால், நீதித்துறை ஸ்தம்பிக்கும் என்று, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுடன், கோவை வக்கீல் சங்கம் சார்பில், ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
நீதிமன்றங்களில் வழக்குகள் நேரடியாக தாக்கல் செய்யப்படும் நடைமுறை மாற்றப்பட்டு, இ- கோர்ட் திட்டத்தின் கீழ், அனைத்து வகையான வழக்குகளையும், மின்னனு(இ- பைலிங்) முறையில் தாக்கல் செய்யும் முறை கொண்டு வரப்பட்டது. அதன்படி, 2023, செப்., முதல் புதிய நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது.
சர்வர் பிரச்னை, தொழில்நுட்ப கோளாறு, ஊழியர்களுக்கு போதிய பயிற்சியின்மை, ஆள்பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்னை காரணமாக, புதிய முறையினை நிறுத்தி வைக்க கோரி, வக்கீல் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தியதால் இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், டிச., 1 முதல் இ- பைலிங் வழக்கு தாக்கல் முறை கட்டாயம் அமல்படுத்தப்படும் என்று ஐகோர்ட் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கோவை வக்கீல் சங்கம் சார்பில், இ-பைலிங் முறையால் ஏற்படும் குறைபாடுகளை சுட்டிகாட்டி, டில்லி சுப்ரீம் கோர்ட் மற்றும் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கு விரிவான கடிதம் அனுப்பியுள்ளனர்.
சர்வர் மெதுவாக இயங்குவதால் வக்கீல்களால், வழக்கு விவரத்தை பதிவேற்ற முடியவில்லை. நீதிமன்ற ஊழியர்கள் வழக்கு ஆவணங்களை பதிவிறக்கம் செய்வதில் சிரமப்படுகின்றனர். அதிக எண்ணிக்கையில், வழக்கு தாக்கல் செய்யப்படுவதால், நீதிமன்ற ஊழியர்கள் டிஜிட்டல் முறையில் பணியாற்ற போதிய அனுபவம் இல்லாமல் உள்ளனர்.
மின்தாக்கல் தளத்தை பயன்படுத்தவும், சிக்கலை தீர்க்கவும் ஊழியர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படாததால், அவர்களால் சந்தேகங்களை தீர்த்து வைக்க முடியவில்லை.
தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும், நீதிமன்ற ஊழியர்களால் ஆய்வு செய்ய முடியாததால், அதிக எண்ணிக்கையிலான வழக்கு காரணமாக, வழக்கு எண்கள் வழங்குவது சாத்தியமற்றதாகிறது. இதனால் வழக்குகளை வக்கீலுக்கு திருப்பி அனுப்புகின்றனர்.
வரையறுக்கப்பட்ட வழக்குகளில், கட்டாய மின்னணு தாக்கல் அமல்படுத்தப்பட்ட பிறகு, சேர்க்கை நிலையிலேயே நிலுவையிலுள்ள வழக்குகள் வெகுவாக அதிகரித்துள்ளன. ஆயிரக்கணக்கான மின்னணு தாக்கல் வழக்குகளுக்கு எண்கள் வழங்கப்படாமல் உள்ளன.
நிர்வாக ஊழியர்கள் இல்லாமை, ஊழியர்களுக்கு போதிய அனுபவம் இல்லாமை, கணினி மற்றும் அதிவேக இன்டர்நெட் இணைப்பு இல்லாதது போன்ற உள்கட்டமைப்பு வசதி இல்லாத காரணத்தால், மின்னணு தாக்கல் முறையில் தாமதம் ஆகிறது.
ஒரு குறிப்பிட்ட நீதிமன்ற ஊழியர், ஒரு குறிப்பிட்ட நாளில் தாக்கல் செய்யப்படும் அனைத்து வழக்குகளுக்கும், உடனடியாக எண்கள் வழங்குவது சாத்தியமற்றது. இருப்பினும் மின்னணு முறையில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை சரிபார்த்து ஏற்றுக்கொண்டு எண்கள் வழங்க போதுமான ஊழியர்கள் இல்லை. வழக்கு தாக்கல் எண்ணிக்கைக்கு ஏற்ப ஊழியர்கள் விகிதாச்சார முரண்பாடு இருப்பது தீர்க்கப்பட வேண்டும்.
சரிபார்ப்பு பணியில் இருக்கும் பெரும்பான்மையான ஊழியர்கள் மின்னனு தாக்கல் முறையை பற்றி நன்கு அறிந்திருக்கவில்லை. இதன் காரணமாக சரி பார்ப்பதை கிடப்பில் போடுகின்றனர். சம்பந்தப்பட்ட ஊழியர்கள் வேறு பணிக்கு மாற்றப்படுகின்றனர். அல்லது நீண்ட விடுப்பில் செல்கின்றனர்.
மின்னணு தாக்கல் முறையில் உள்ள சிக்கல்களை, அவர்களுக்கு விளக்கும் போது, அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆவணங்கள் பதிவேற்றம் செய்யும் போது, கம்ப்யூட்டரில் கோளாறு ஏற்பட்டால், ஏற்கனவே பதிவேற்றம் செய்தது காணாமல் போய்விடுகிறது. மீண்டும் அதே வேலையையே செய்ய வேண்டியுள்ளது.
எனவே இதுபோன்ற குறைபாடுகளை சரிபடுத்தாமல் மின்னனு தாக்கல் சாத்தியமில்லை.
அனைத்து வழக்குகளுக்கும் மின்னணு தாக்கல் கட்டாயம் ஆக்கப்பட்டால், சிக்கல்கள் சரி செய்யப்படாமல், மாவட்டம் முழுவதும் நீதி நிர்வாகம் முற்றிலும் ஸ்தம்பித்து விடும். எனவே, அனைத்து வழக்கிலும் மின்னணு தாக்கல் முறையை அவசரமாக செயல்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு, கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

