/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
30 ஆண்டுகளுக்கு பின் 'ரிலீஸ்' மாஸ்டர் பிளான்! ஆலோசனை வழங்க அழைப்பு!
/
30 ஆண்டுகளுக்கு பின் 'ரிலீஸ்' மாஸ்டர் பிளான்! ஆலோசனை வழங்க அழைப்பு!
30 ஆண்டுகளுக்கு பின் 'ரிலீஸ்' மாஸ்டர் பிளான்! ஆலோசனை வழங்க அழைப்பு!
30 ஆண்டுகளுக்கு பின் 'ரிலீஸ்' மாஸ்டர் பிளான்! ஆலோசனை வழங்க அழைப்பு!
UPDATED : பிப் 12, 2024 02:19 AM
ADDED : பிப் 12, 2024 01:10 AM

கோவை:கிட்டத்தட்ட, 30 ஆண்டு களுக்கு பின், கோவை உள்ளூர் திட்டக்குழுமத்தின் எல்லை, 1,531.57 கி.மீ., பரப்புக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு, தயாரிக்கப்பட்டுள்ள வரைவு 'மாஸ்டர் பிளான்', தமிழக அரசின் அனுமதியோடு, பொதுமக்கள் பார்வைக்கு நேற்று வெளியிடப்பட்டது. இன்னும், 60 நாட்களுக்குள் கருத்து, ஆலோசனை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கோவை மாவட்டத்துக்கான 'மாஸ்டர் பிளான்', (முழுமை திட்டம்) கடைசியாக, 1994ல் வெளியிடப்பட்டது. அதன்படி, கோவை மாநகராட்சி, ஏழு பேரூராட்சிகள், 87 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி, 1,287 சதுர கி.மீ., பரப்புக்கு உள்ளூர் திட்ட குழும பகுதிக்கு, முழுமை திட்டம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தற்போது வரை நடைமுறையில் இருக்கிறது. வழக்கமாக, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை 'மாஸ்டர் பிளான்' புதுப்பிக்கப்படும். கடந்த காலங்களில், அதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு, கைவிடப்பட்டது.
30 ஆண்டுகளுக்குப் பின்...
தற்போது, கிட்டத்தட்ட, 30 ஆண்டுகளுக்குப் பின், 2041ல் எதிர்பார்க்கப்படும் மக்கள் தொகை அடிப்படையில், புதிய 'மாஸ்டர் பிளான்' தயாரித்து, தமிழக அரசின் ஒப்புதலுக்கு நகர ஊரமைப்புத்துறை அனுப்பியது. இந்த மாஸ்டர் பிளானில், 118 வருவாய் கிராமங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
கோவை உள்ளூர் திட்டக்குழும எல்லையில், 24 கிராம ஊராட்சிகள், குறிச்சி புது நகர் வளர்ச்சி குழும பகுதியை சேர்த்து கோவை மாநகராட்சி, கூடலுார், கருமத்தம்பட்டி, மதுக்கரை, காரமடை நகராட்சிகள், 24 பேரூராட்சிகள் மற்றும், 66 கிராம ஊராட்சிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
1,531.57 கி.மீ., பரப்புடன், கோவை உள்ளூர் திட்டக்குழுமத்துக்கான திருத்திய எல்லை விரிவாக்கம் செய்து, வரைவு மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு, தமிழக அரசின் ஒப்புதல் பெறப்பட்டிருக்கிறது.
நகரில் போக்குவரத்து நெரிசல்
கோவை நகர் பகுதிக்குள், சரக்கு வாகனங்கள் வந்து செல்வதால் தேவையற்ற போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மாநகராட்சி எல்லைக்குள் செயல்படும் சரக்கு முனையங்களை மூட வேண்டும்.
அரசுக்கு சொந்தமான இடம், எல் அண்டு டி பை பாஸ் அருகே, வெள்ளலுார் பகுதியில் இருக்கிறது. அப்பகுதியில், டிரக் பார்க்கிங் மற்றும் சரக்குகள் மேலாண்மை செய்யும் நிலையம் ஏற்படுத்தலாம். அதே பகுதியில், பஸ் ஸ்டாண்ட் ஏற்படுத்தலாம்.
நகருக்கு வெளியே புறநகரில் சரக்கு முனையங்கள் ஏற்படுத்த பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. இதன்படி, அவிநாசி ரோட்டில் கருமத்தம்பட்டி, பேரூர் ரோட்டில் பூலுவபட்டி, பாலக்காடு ரோட்டில் மதுக்கரை, திருச்சி ரோட்டில் சூலுார் அருகே, பொள்ளாச்சி ரோட்டில் மலுமிச்சம்பட்டி, மேட்டுப்பாளையம் ரோட்டில் நரசிம்மநாயக்கன்பாளையம், சத்தி ரோட்டில் கோவில்பாளையம் ஆகிய இடங்களில் சரக்கு முனையங்கள் ஏற்படுத்தினால், நகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கலாம் என கூறப்பட்டிருக்கிறது.
பஸ் ஸ்டாண்டுகளை மாற்றலாம்
நகர பேருந்து, வெளியூர் பேருந்து, வெளிமாநில பேருந்துகள் இயக்கப்படும் அனைத்து பஸ் ஸ்டாண்ட்டுகளும், நகரத்தின் மையப்பகுதியான காந்திபுரத்தில் செயல்படுகின்றன.
அதனால், பஸ் ஸ்டாண்ட்டுகளை வேறிடங்களில் மறுகட்டமைப்பு செய்ய வேண்டியது அவசியம். மக்களின் தேவைக்கேற்ப கூடுதல் பஸ் ஸ்டாண்ட்டுகள் உருவாக்க வேண்டும்.
லட்சுமி மில்ஸ் சந்திப்பு, காந்திபுரம், சிங்காநல்லுார், ராமநாதபுரம், சரவணம்பட்டி, சூலுார், சுந்தராபுரம், மலுமிச்சம்பட்டி, கிராஸ்கட் ரோடு, கோவைப்புதுார் பிரிவு, ஹோப்ஸ் காலேஜ், செட்டிபாளையம், செல்வபுரம் உள்ளிட்ட, 30 இடங்களில் உள்ள சாலை சந்திப்புகளை மேம்படுத்த வேண்டியது, கட்டாயம் என கூறப்பட்டிருக்கிறது.