/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தாயைப் பிரிந்த குட்டி யானைக்கு மருத்துவ சிகிச்சை
/
தாயைப் பிரிந்த குட்டி யானைக்கு மருத்துவ சிகிச்சை
ADDED : மே 27, 2025 09:47 PM

மேட்டுப்பாளையம்; தாயைப் பிரிந்து, உடல் மெலிந்த நிலையில் தவித்து வரும், குட்டி யானைக்கு, சிறுமுகை வனத்துறையினர் மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சிறுமுகை வனப்பணியாளர்கள், சிறுமுகை வனப்பகுதியில் உள்ள கூத்தாமண்டி பிரிவு, எதிர்மூஞ்சி முகாம் ஆகிய வனப்பகுதிகளில், ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது பவானிசாகர் அணை நீர் தேக்கம் பகுதி, சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் சிறுமுகை வனப்பகுதி ஆகியவை சந்திக்கும் வனப்பகுதியில், தாயைப் பிரிந்து ஆறிலிருந்து எட்டு மாத ஆண் குட்டி யானை, அங்குமிங்கும் தள்ளாடியபடி நடந்து சென்றது. இதை பார்த்த வனப் பணியாளர்கள், சுற்று வனப்பகுதியில் யானைகள் கூட்டமாக ஏதேனும் உள்ளதா என, தேடிப் பார்த்தனர். யானைகள் கூட்டம் ஏதும் இல்லாததால், குட்டி ஆண் யானையை, சிறுமுகை எதிர்மூஞ்சி வனத்துறை முகாமுக்கு அழைத்து வந்தனர்.
வனப் பணியாளர்கள் இது குறித்து சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ்க்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில், மாவட்ட வனத்துறை கால்நடை டாக்டர் சுகுமார், உடல் மெலிந்த குட்டி யானைக்கு மருத்துவ சிகிச்சையும், சத்தான உணவுப் பொருளும் வழங்கி வருகிறார்.
மேலும் சத்தியமங்கலம், முதுமலை, பவானிசாகர் ஆகிய வனப்பகுதிகளில் அந்தந்த வனப் பணியாளர்கள் யானைகள் கூட்டமாக ஏதேனும் நடமாட்டம் உள்ளதா. மேலும் குட்டியை பிரிந்து தாய யானை ஏதேனும் தவித்து வருகிறதா என கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது சிறுமுகை வனத்துறையினர் குட்டி யானைக்கு சத்தான உணவு வழங்கியும், மருந்து மாத்திரைகளை வழங்கியும் வருகின்றனர்.