UPDATED : நவ 10, 2026 09:50 AM
ADDED : நவ 10, 2026 09:46 AM

உடுமலை: உடுமலை அருகே, மாநில நெடுஞ்சாலை–நான்கு வழிச்சாலை சந்திப்பு பகுதியில், நிலுவையிலுள்ள பணிகளை விரைவாக முடித்து விபத்துகளை தவிர்க்க வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பொள்ளாச்சி–திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில், உடுமலை நகர எல்லையில், தாராபுரம் மாநில நெடுஞ்சாலை குறுக்கிடுகிறது. இந்த சந்திப்பு பகுதியில், நான்கு வழிச்சாலையில், மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், சின்னவீரம் பட்டி மற்றும் பாலப்பம்பட்டியில் இருந்து வரும் அணுகுசாலைகள், நான்கு வழிச்சாலையில் சேரும் வகையில், சந்திப்பு பகுதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அணுகுசாலை மற்றும் மாநில நெடுஞ்சாலையில், இருபுறங்களிலும் வாகனங்கள் வரும் போது அப்பகுதியில் போக்குவரத்து குளறுபடி ஏற்படுகிறது.
இப்பிரச்னைக்கு தீர்வாக சந்திப்பு மேம்பாட்டு பணிகள் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், அணுகுசாலை முடிவடையும் இடத்தில் தரைமட்ட பாலம் கட்டும் பணி நீண்ட நாட்களாக இழுபறியாக உள்ளது.
பணிகள் நடப்பது குறித்து உரிய எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட வில்லை. கம்பி வெளியே நீட்டிக் கொண்டிருப்பதால், இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் விபத்துக் குள்ளாகும் அபாயம் உள்ளது.
இப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். இதே போல் சந்திப்பு பகுதியில், உயர் மின் விளக்கு பொருத்த வேண்டும். தற்போது சந்திப்பு பகுதி மற்றும் மேம்பாலத்தின் கீழ் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது.
அணுகுசாலை, மாநில நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் இருந்து வாகனங்கள் அதிவேகமாக செல்வதால், விபத்து அபாயம் உள்ளது. உயர் மின் விளக்கு பொருத்தி, ரவுண்டானா அமைத்தால் இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
