/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மெகா வினாடி-வினா போட்டிகள் துவக்கம்; முதற்கட்டமாக, 65 பள்ளிகளில் நடத்த திட்டம்
/
மெகா வினாடி-வினா போட்டிகள் துவக்கம்; முதற்கட்டமாக, 65 பள்ளிகளில் நடத்த திட்டம்
மெகா வினாடி-வினா போட்டிகள் துவக்கம்; முதற்கட்டமாக, 65 பள்ளிகளில் நடத்த திட்டம்
மெகா வினாடி-வினா போட்டிகள் துவக்கம்; முதற்கட்டமாக, 65 பள்ளிகளில் நடத்த திட்டம்
ADDED : நவ 19, 2024 11:46 PM

கோவை; 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற வினாடி-வினா போட்டி, 65 மாநகராட்சி பள்ளிகளில் நடத்தப்படவுள்ள நிலையில் நேற்று எஸ்.ஆர்.பி., அம்மணியம்மாள் பள்ளியில் துவங்கியது.
பள்ளி மாணவர்களிடம் அறிவியல் ஆய்வுத்திறன், கணிதம், மொழித்திறனை ஊக்குவிக்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் வெளியிடப்படுகிறது.
இதை வாசிக்கும் மாணவர்களிடம் கற்றல் சார்ந்த தேடலை விரிவுபடுத்தும் விதத்திலும், தேர்வுக்கு உற்சாகப்படுத்தவும் கடந்த, 2018 முதல் 'வினாடி-வினா' போட்டி நடத்தப்படுகிறது.
இதுவரை, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. இந்தாண்டு மாநகராட்சி பள்ளிகளிலும் 'வினாடி வினா விருது, 2024-25' போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள, 65 பள்ளிகள் இடம்பெறும் நிலையில், நேற்று ஆர்.எஸ்., புரம், எஸ்.ஆர்.பி., அம்மணியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போட்டி துவங்கியது.
'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ், கோவை மாநகராட்சி மற்றும் இந்துஸ்தான் கல்வி குழுமத்துடன் இணைந்து இப்போட்டியை வழங்குகிறது. பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு அரையிறுதி போட்டி நடக்கும்.
இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு இறுதிப்போட்டி நடத்தப்படும். இறுதி போட்டியில் இடம்பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. தற்போது, மாநகராட்சி பள்ளிகளிலும் போட்டி நடப்பது மாணவர்களிடம் மகிழ்ச்சியை தந்துள்ளது.
எஸ்.ஆர்.பி., அம்மணியம்மாள் பள்ளியில் நேற்று தகுதி சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வை, 100 பேர் எழுதினர். இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது.
மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், 'ஜி' அணியை சேர்ந்த, 9ம் வகுப்பு மாணவியர் திவ்யாஸ்ரீ, ஷீஜூ ஜெல்துரு ஆகியோர் முதலிடம் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பரிசுகள் வழங்கினார்.
நீங்கள் படித்தால் மட்டும் போதும்!
பின்னர், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பேசியதாவது:
எதையும் கற்றுக்கொண்டு செயல்பட வேண்டும். விளையாட்டு, அறிவியல், பொது அறிவு உள்ளிட்ட அம்சங்கள் 'பட்டம்' இதழில் இடம்பெற்றுள்ளன. படிப்பு ஒரு புறம் இருந்தாலும் கூடுதல் தனித்திறனையும் வளர்த்துக்கொள்வது அவசியம்.
வாழ்வில் அடுத்த கட்டத்துக்கு செல்ல, என்ன முடிவு எடுக்க வேண்டும் என்ற திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, 10, பிளஸ்1, கல்லுாரி முடித்து என்ன செய்யப்போகிறோம் என்ற முடிவு எடுக்கும் திறமையை வளர்த்துக்கொள்வது அவசியம்.
முடிவு எடுக்கும் முன்பு அதற்கான தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு செய்தி தாள்களை படிக்க வேண்டும். இதுபோன்ற தகவல்கள், முடிவு எடுக்க தேவையான விஷயங்கள், நமது மொழியின் சிறப்பு, அறிவியல், புத்தகத்துக்கும் நடைமுறைக்கும் உள்ள சிக்கல்கள் ஆகியவற்றை செய்தி தாள்களில் அறிந்துகொள்ளலாம்.
எனவே, தினமும் செய்தி தாள்களை வாசிக்கவும் வேண்டும், சில விஷயங்களை படிக்கவும் வேண்டும். படிப்பது மட்டுமின்றி குறிப்புகள் எடுக்க வேண்டும். பட்டம் வினாடி-வினா போன்ற நிகழ்வுகளை பயன்படுத்தி வாழ்வில் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும். அரசும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே, நீங்கள் படித்தால் மட்டும் போதும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மாநகராட்சி கல்வி அலுவலர் குணசேகரன், பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ், வினாடி-வினா ஒருங்கிணைப்பாளர்கள் கலாதேவி, ஜெயமணி, ஆசிரியர்கள் சுகுணா, கிருஷ்ணமூர்த்தி, பெலிக்ஸ் மனோகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பெருமை!
வெற்றி பெற்ற மாணவி திவ்யாஸ்ரீ: பட்டம் இதழில் பொது அறிவு, விளையாட்டு உள்ளிட்ட அனைத்து அம்சங்களும், கல்விக்கு வழிகாட்டும் வகையில் இடம்பெற்றுள்ளது. பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களும் இதில் கேட்கப்படுகின்றன. வினாடி-வினா வாயிலாக மாநகராட்சி கமிஷனர் கையில் பரிசு பெற்றது பெருமைக்குரியது.
தகவல்கள் தாராளம்!
மாணவி ஷீஜூ ஜெல்துரு: பட்டம் இதழ் படிப்பதால் பொது அறிவுடன், அறிவியல் சார்ந்த தகவல்களை அறிந்துகொள்ள முடிகிறது. பாட புத்தகத்தில் மட்டுமின்றி, வெளியில் இருந்தும் தகவல்கள் இடம்பெறுகின்றன. இது தேர்வு சமயத்தில் பயனுள்ளதாக அமையும்.

