/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எலும்புகளின் அடர்த்தியை குறைக்கும் மெனோபாஸ்
/
எலும்புகளின் அடர்த்தியை குறைக்கும் மெனோபாஸ்
ADDED : ஜன 19, 2025 12:23 AM

மெனோபாஸ் நிலைக்கு பின்னர், பல பெண்கள் ஆஸ்டியோபோரோசிஸ் நோயால் பாதிக்கப்படுகின்றனர். எலும்பின் அடர்த்தி குறைவதும், தடுக்கி விழுந்தாலும், எடை துாக்குதல் போன்று எளிதாக எலும்பு உடைவதே, ஆஸ்டியோபோரோசிஸ்.
பொதுவாக, 45 வயதுக்கு மேல் 55 வயதுக்குள் பெண்கள் மெனோபாஸ் நிலையை அதாவது, மாதவிடாய் முற்றிலும் நிற்கும் நிலையை அடைகின்றனர்.
இச்சமயத்தில், பெண்களுக்கு ஹார்மோன் குறைபாடு, ஈஸ்ட்ரோஜனின் குறைவான உற்பத்தி காரணமாக எலும்பு அடர்த்தி குறைந்து, இப்பாதிப்பை உருவாக்குகிறது.
மெனோபாஸ் நிலை எட்ட தயாராகும் பெண்களாக இருந்தாலும், வயதான ஆண்களும் இப்பாதிப்பு வராத வகையில், சமச்சீர் உணவு எடுத்துக்கொள்ளுதல், உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்தவேண்டும் என, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அரசு மருத்துவமனை எலும்பு முறிவு விபத்து சிகிச்சை பிரிவு இயக்குனர் டாக்டர் வெற்றிவேல் செழியன் கூறியதாவது:
ஆஸ்டியோபோரோசிஸ் நோய், மெனோபாஸ் நிலை ஏற்பட்ட பெண்களில் அதிகம் காணப்படுகிறது. சமீபகாலமாக வயதான ஆண்களுக்கும், இப்பிரச்னை அதிகளவில் காண முடிகிறது. புரதச்சத்து, கார்போஹைட்ரேட் உள்ளிட்ட அனைத்து சத்துக்களையும் கொண்ட சமச்சீர் சத்தான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். கீரை, காய்கறி அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
முதுமை வயதை அடைந்த பெண்கள், சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். மாதவிடாய் நிற்கும் போது எலும்பின் அடர்த்தி குறைந்து, பெண்கள் சாதாரணமாக விழுந்தால் கூட மணிக்கட்டு, இடுப்பு எலும்பு உடைவதை காண்கிறோம்.
சத்தான உணவு எடுத்துக்கொள்ளாத வயதான ஆண்களுக்கும், எலும்பு முறிவு எளிதாக ஏற்படும் சூழல் உருவாகிறது.
வீட்டிலும், பாத்ரூமிலும் டைல்ஸ் வழுக்காத வகையில், இருப்பதை உறுதி செய்யவேண்டும். வாகனங்களை இயக்கும் போது, மிக கவனமாக இருக்க வேண்டும். சமச்சீர் உணவுகளும், உடற்பயிற்சியும் கட்டாயம் பின்பற்றவேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

