/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னையில் வெள்ளை ஈ கட்டுப்படுத்தும் வழிமுறை; கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம்
/
தென்னையில் வெள்ளை ஈ கட்டுப்படுத்தும் வழிமுறை; கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம்
தென்னையில் வெள்ளை ஈ கட்டுப்படுத்தும் வழிமுறை; கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம்
தென்னையில் வெள்ளை ஈ கட்டுப்படுத்தும் வழிமுறை; கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம்
ADDED : ஏப் 15, 2025 11:17 PM
மடத்துக்குளம்; மடத்துக்குளம் வட்டாரத்தில், 6 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது தென்னையில் ரூகோஸ் வெள்ளை ஈ தாக்குதல் அதிகளவு காணப்படுகிறது.
இதனை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்தி, தென்னை மரங்களை பாதுகாப்பதற்காக, விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம், தோட்டக்கலைத்துறை சார்பில், கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு முகாம் நடந்து வருகிறது.
தென்னை மரங்களில் வெள்ளை ஈ, கட்டுப்படுத்த, இளம் தென்னையாக இருப்பின் தென்னங்கீற்றுகளின் அடிப்பரப்பில் தண்ணீரை வேகமாக அடிக்கவும், மஞ்சள் ஒட்டுப்பொறி ஏக்கருக்கு, 20 வீதம் கட்ட வேண்டும்.
அபெர்டோக்கிரைசா இறைவிழுங்கி முட்டைகளை ஏக்கருக்கு, 400 வீதம் கீற்றுக்களில் கட்டவும், என்கார்சியா ஒட்டுண்ணிகளை ஏக்கருக்கு, 10 இலை துண்டுகள் கட்டவும் வேண்டும்.
கரும்பூசனத்தை நீக்க, 25 கிராம் மைதா மாவு பசையை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
இயற்கை எதிரிகளை பாதுகாக்க, ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கவும், பரிந்துரைக்கப்பட்ட உரங்களை தவிர மற்ற உரங்களை பயன்படுத்தக்கூடாது.
இம்முறைகளை அனைத்து தென்னை சாகுபடி விவசாயிகளும் ஒருங்கிணைந்து கடைபிடித்தால், வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தி தென்னை மரங்களை காப்பாற்ற முடியும்.
மேலும், இது தொடர்பான பயிற்சிகள் மடத்துக்குளம் வட்டார கிராமங்களிலும், நேரடியாக விவசாயிகளின் தோட்டங்களிலும், தோட்டக்கலைத்துறை அலுவலர்களால் செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது என, மடத்துக்குளம் தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

