/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேட்டுப்பாளையம் நெரிசலுக்கு... விடிவுகாலம்!சாலை விரிவாக்கம் செய்ய 'சர்வே'
/
மேட்டுப்பாளையம் நெரிசலுக்கு... விடிவுகாலம்!சாலை விரிவாக்கம் செய்ய 'சர்வே'
மேட்டுப்பாளையம் நெரிசலுக்கு... விடிவுகாலம்!சாலை விரிவாக்கம் செய்ய 'சர்வே'
மேட்டுப்பாளையம் நெரிசலுக்கு... விடிவுகாலம்!சாலை விரிவாக்கம் செய்ய 'சர்வே'
ADDED : செப் 07, 2024 02:43 AM

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் நகர் பகுதியில் உள்ள சாலையை விரிவாக்கம் செய்ய, தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், தற்போது சர்வே பணிகள் துவங்கப்பட்டு, வேகமாக நடந்து வருகின்றன.
மேட்டுப்பாளையம் நகரில், கோவை -- மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் -- ஊட்டி, மேட்டுப்பாளையம் --- அன்னூர், சிறுமுகை --- அண்ணாஜிராவ் உள்ளிட்ட முக்கிய சாலைகள் உள்ளன.
நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வருவோர், விவசாயிகள், வெளியூர்களில் இருந்து வேலை நிமித்தமாக வருவோர், உள்ளூர்வாசிகள் என இச்சாலைகளை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இச்சாலைகளில் சாலையோர கடைகள், தள்ளுவண்டி, கடைகளின் முன்பக்கம் அதிகரிப்பு மற்றும் பொருட்கள் வைப்பு என ஆக்கிரமிப்பு இருந்தன. இந்த ஆக்கிரமிப்புகளால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்பட்டது.
பின், ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், தேசிய நெடுஞ்சாலை துறையினர் அதிரடியாக, கோவை - மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி சாலையில் அதிரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மீண்டும் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
விரிவாக்கம்
ஆக்கிரமிப்புகள் அகற்றியதையடுத்து மேட்டுப்பாளையம் நகர் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் என்.ஹச். 44 தேசிய நெடுஞ்சாலை, அதாவது கோவை -- மேட்டுப்பாளையம் மற்றும் மேட்டுப்பாளையம் -- ஊட்டி சாலையை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலை துறையினர் தற்போது சர்வே எடுக்கும் பணிகளை செய்து வருகின்றனர்.
கணக்கெடுப்பு
தேசிய நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் முரளி குமார் கூறுகையில், ''சர்வே பணிகளின் போது தற்போது உள்ள சாலையின் அளவு, விரிவாக்கம் செய்யப்பட வேண்டிய அளவு, ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு வாகனங்கள் செல்கின்றன என கணக்கெடுத்து வருகிறோம்.
சர்வே பணிகளை தொடர்ந்து, திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்படும்,'' என்றார்.
பவானி ஆற்றில் பாலம்
சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,''பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு, ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைத்துள்ளது. பவானி ஆற்று பாலம் வலுவிழந்து வருகிறது.
ஆற்றுப்பாலத்தின் அளவும் குறுகலாக உள்ளது. பவானி ஆற்றின் குறுக்கே நான்கு வழிச்சாலைக்கு ஏற்றுது போல் புதிதாக பாலம் கட்டப்பட வேண்டும். அதற்கான திட்ட மதிப்பீடும் செய்ய வேண்டும்.
வரும் டிசம்பர் மாதம் பள்ளி விடுமுறைகளை அடுத்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகம் இருக்கும். அதற்குள்ளாக சாலை விரிவாக்க பணிகளை துவக்கி முடிக்க வேண்டும்,'' என்றனர்.