/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதல்வர் அறிவித்த ஊக்கத்தொகை வரலை: பால் உற்பத்தியாளர்கள் தவிப்பு
/
முதல்வர் அறிவித்த ஊக்கத்தொகை வரலை: பால் உற்பத்தியாளர்கள் தவிப்பு
முதல்வர் அறிவித்த ஊக்கத்தொகை வரலை: பால் உற்பத்தியாளர்கள் தவிப்பு
முதல்வர் அறிவித்த ஊக்கத்தொகை வரலை: பால் உற்பத்தியாளர்கள் தவிப்பு
ADDED : பிப் 12, 2024 11:03 PM
அன்னுார்:முதல்வர் அறிவித்த ஆவின் பாலுக்கான ஊக்கத்தொகை, ஒரு மாதமாக வராததால், பால் உற்பத்தியாளர்கள் தவிக்கின்றனர்.
தமிழகத்தில், ஆவின் நிறுவனம், தினமும் நான்கு லட்சம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து, 32 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வருகிறது. மாட்டு தீவனங்களுக்கானவிலை அதிகரித்ததன் காரணமாக கொள்முதல் விலை கட்டுபடியாகவில்லை என தமிழக முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த டிச. 13ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், 'டிச. 18ம் தேதி முதல் பசும்பால் கொள்முதலுக்கு ஒரு லிட்டருக்கு மூன்று ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்,' என அறிவித்தார்.
ஒரு மாதத்திற்கு பிறகு, ஜன. 10ம் தேதி வரை ஆவினுக்கு சப்ளை செய்தவர்கள் கணக்கிடப்பட்டு அவர்களுக்கு ஒரு லிட்டருக்கு மூன்று ரூபாய் ஊக்கத்தொகை ஜன. 11-ம் தேதி வழங்கப்பட்டது. அதன் பிறகு தற்போது 33 நாட்கள் ஆகிவிட்டது.
அதன் பிறகு சப்ளை செய்த பாலுக்கு இதுவரை இன்று (நேற்று) வரை ஊக்கத்தொகை வரவில்லை.
இதுகுறித்து அன்னுார் வட்டார பால் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:
தற்போதைய விலைவாசியில் கறவை மாடு வளர்ப்பது மிகவும் நஷ்டத்திற்கு உரியதாகும். இந்நிலையில் தமிழக அரசு ஒரு லிட்டருக்கு மூன்று ரூபாய் கொடுப்பதாக அறிவித்ததை அடுத்து நஷ்டம் குறையும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் ஊக்கத்தொகை கடந்த நான்கு வாரங்களாக வழங்கப்படவில்லை. ஜனவரி 10ம் தேதிக்கு பிறகு ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட்ட பாலுக்கு கோவை மாவட்டம் முழுவதும் தொகை வழங்கப்படவில்லை.
இதனால் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளோம். முதல்வர் உடனடியாக பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்க தொகை வழங்க வேண்டும்.
இவ்வாறு பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.