ரோட்டோரத்தில் தடுப்பு அமைக்க வாகன ஓட்டுநர்கள் எதிர்பார்ப்பு
ரோட்டோரத்தில் தடுப்பு அமைக்க வாகன ஓட்டுநர்கள் எதிர்பார்ப்பு
UPDATED : நவ 15, 2026 04:26 PM
ADDED : நவ 15, 2026 04:24 PM

வால்பாறை: வால்பாறையில், சாலையோரம் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை நகரில் இருந்து, நல்லகாத்து செல்லும் ஒரு கி.மீ.,துாரம் உள்ள ரோடு கான்கிரீட் ரோடாக உள்ளது. இந்த வழித்தடத்தில், முடீஸ், சோலையாறுடேம், சாலக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
இது தவிர, நல்லமுடி காட்சி முனை பகுதிக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களும், இந்த ரோட்டில் தான் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், வால்பாறை நகரில் இருந்து ஒரு கி.மீ., தொலைவில் உள்ள நல்லகாத்து ரோட்டின், இடது புறம் தடுப்புச்சுவர் கட்டப்படவில்லை. இதனால் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது:
வால்பாறை மலைப்பாதையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. இதனால், வாகனங்களை மிக கவனமாக இயக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், வால்பாறை நகரில் இருந்து, நல்லகாத்து வழியாக செல்லும் ரோட்டில் மிகவும் அபாயகரமான வளைவு உள்ளது.
இங்கு சாலையோரம் தடுப்புச்சுவர் கட்ட நகராட்சி அதிகாரிகள் தயக்கம் காட்டுவதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. வாகன ஓட்டுநர்கள் மற்றும் சுற்றுலா பயணியர் நலன் கருதி சாலையோரம் தடுப்புச்சுவர் கட்ட நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
