/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூதாட்டியிடம் நகை திருடிய நகராட்சி ஊழியர் கைது
/
மூதாட்டியிடம் நகை திருடிய நகராட்சி ஊழியர் கைது
ADDED : ஜன 02, 2026 05:55 AM

வால்பாறை: வால்பாறையில், மூதாட்டியிடம் நகை திருடிய நகராட்சி தற்காலிக ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருபவர் செல்வராஜ். இவரது மனைவி சாந்தி, 65. இவர்கள் காந்திசிலை பஸ் ஸ்டாண்டின் பின்புறம் உள்ள ஆசிரியர் குடியிருப்பில் வசிக்கின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு சாந்தி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, வீட்டிற்குள் புகுந்த ஒருவர், சாந்தியின் கழுத்தை நெரித்துள்ளார்.
அவர், மயக்கமடைந்தவுடன் அணிந்திருந்த மோதிரம், கம்மல் மற்றும் பீரோவில் இருந்த தங்க செயின் ஆகியவற்றை திருடி சென்றார். மயக்கம் தெளிந்த அவர் நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து, சாந்தி கொடுத்த புகாரின் பேரில், வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் குடிநீர் விநியோகத்தில் தண்ணீர் திறப்பு பணியில் ஈடுபடும் தற்காலிக ஊழியர் உதயகுமார்,45, என்பவர் வீடு புகுந்து கொலை முயற்சியில் ஈடுபட்டு நகையை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து இரண்டு பவுன் நகைகளையும் பறிமுதல் செய்தனர்.

