/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்நடை உரிமையாளர்களுக்கு நகராட்சியினர் அபராதம்
/
கால்நடை உரிமையாளர்களுக்கு நகராட்சியினர் அபராதம்
ADDED : ஜூன் 19, 2025 08:29 AM
வால்பாறை : வால்பாறை நகரம் ஒரு கி.மீ., சுற்றளவில் அமைந்துள்ளது. பொள்ளாச்சி செல்லும் மெயின் ரோட்டில் நகரம் அமைந்துள்ளதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இது தவிர அங்கு, சுற்றுலா வாகனங்கள் அதிக அளவில் வருவதால், மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். இந்நிலையில், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக கால்நடைகள் நடமாடுவதால், மக்கள் நிம்மதியிழந்து தவிக்கின்றனர்.
நகரில் கால்நடைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த, நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்த செய்தி, 'தினமலர்' நாளிதழில் நேற்று முன்தினம் வெளியானது.
இதனையடுத்து, நகராட்சி துப்புரவு அலுவலர் செந்தில்குமார் உத்தரவின் பேரில், நகராட்சி பணியாளர்கள் ரோட்டில் உலா வந்த, 9 கால்நடைகளை பிடித்தனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறை நகரில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக கால்நடைகளை ரோட்டில் உலா வருவதை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, கால்நடை உரிமையாளர்களுக்கு தலா, 500 ரூபாய் அபராதம் விதிக்கபட்டுள்ளது. மீண்டும் கால்நடைகள் ரோட்டில் நடமாடினால் கோ - சாலைக்கு அனுப்பி வைக்கப்படும்' என்றனர்.