/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொங்கு மண்டலத்தில் நாங்கதான் 'கிங்கு': ராமநாதபுரம் அணியை சொல்லியடித்த கோவை அணி
/
கொங்கு மண்டலத்தில் நாங்கதான் 'கிங்கு': ராமநாதபுரம் அணியை சொல்லியடித்த கோவை அணி
கொங்கு மண்டலத்தில் நாங்கதான் 'கிங்கு': ராமநாதபுரம் அணியை சொல்லியடித்த கோவை அணி
கொங்கு மண்டலத்தில் நாங்கதான் 'கிங்கு': ராமநாதபுரம் அணியை சொல்லியடித்த கோவை அணி
ADDED : அக் 08, 2024 12:29 AM

கோவை : மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் நேற்று துவங்கிய நிலையில், கோவை அணி வீரர்கள், 148-17 என்ற புள்ளி கணக்கில், ராமநாதபுரம் அணியை வீழ்த்தினர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநிலம் முழுவதும், 'முதல்வர் கோப்பை' விளையாட்டு போட்டிகள் கடந்த செப்., 10ம் தேதி முதல், 24ம் தேதி வரை நடந்தன.
கோவை மாவட்டத்தில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், பொது பிரிவினர் என, 39 ஆயிரம் பேர் பதிவு செய்து, திறமைகளை வெளிப்படுத்தினர்.
தடகளம், கால்பந்து, கபடி, சிலம்பம் என பல்வேறு போட்டிகள் மாவட்ட அளவில் நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு மாநில அளவிலான போட்டிகள் பல்வேறு மாவட்டங்களில் நடக்கிறது.
கோவையில் நேரு விளையாட்டு எதிரே மாநகராட்சி மைதானத்தில், முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நேற்று துவங்கியது. பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் துவக்கிவைத்தார்.
வீரர், வீராங்கனைகள் என இரு பிரிவுகளிலும், 38 மாவட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று வீரர்களுக்கான முதல் போட்டியில், கோவை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட அணிகள் மோதின.
ஆட்டம் துவங்கிய சில நொடிகளிலேயே, கோவை அணி வீரர்கள் புள்ளிகளை குவிக்க துவங்கினர். கோவை அணி வீரர்கள், 11 புள்ளிகள் எடுத்திருந்த நிலையில், 5.55 நிமிடத்தில்தான் முதல் புள்ளியை ராமநாதபுரம் அணி வீரர்கள் துவங்கினர்.
சுறுசுறுப்பாக விளையாடிய கோவை அணியினர், 40 நிமிட ஆட்டத்தின் முடிவில், 148 புள்ளிகள் எடுத்தனர். ராமநாதபுரம் அணியினரோ, 17 புள்ளிகள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தனர். அடுத்து, மதுரை அணி, 88-43 என்ற புள்ளி கணக்கில், கன்னியாகுமரி அணியை வென்றது.
வீராங்கனைகளுக்கான முதல் போட்டியில், கரூர் அணி, ராணிப்பேட்டை அணியுடன் மோதியது. இதில், பரபரப்பாக விளையாடிய கரூர் அணி வீராங்கனைகள், 47-20 என்ற புள்ளி கணக்கில், ராணிப்பேட்டை அணியை வென்றனர்.
தொடர்ந்து, 10ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கும், 14 முதல், 18ம் தேதி வரை கல்லுாரி மாணவர்களுக்கும் போட்டிகள் நடக்கின்றன.