/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
படித்து சுவைக்க வேண்டிய 'நாஞ்சில் நாட்டு உணவு'
/
படித்து சுவைக்க வேண்டிய 'நாஞ்சில் நாட்டு உணவு'
ADDED : நவ 16, 2025 12:45 AM

வாசகர்கள் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் குறித்து, வாசித்தவர்கள் வாசித்த புத்தகங்களில் இருந்து, தங்களின் வாசிப்பு அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கின்றனர். இந்த வாரம் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் எழுதிய, 'நாஞ்சில் நாட்டு உணவு' என்ற நுால் குறித்து, ஓவியர் ஜீவா சொல்கிறார்.
நாவல், சிறுகதை நுால்களுக்கு இணையாக, கட்டுரை நுால்களையும் எழுதி வருபவர் எழுத்தாளர் நாஞ்சில்நாடன். இவர் எழுதிய கட்டுரை நுால்களில், 'நாஞ்சில் நாட்டு உணவு' என்ற புத்தகம் மிகவும் முக்கியமானது.
தமிழகத்தில் மக்கள் எல்லோரும் தமிழில் பேசினாலும், அந்தந்த வட்டாரங்களுக்கு ஏற்ப பேசும் முறை, உச்சரிப்பு மாறுவது போல், மக்கள் சமைத்து உண்ணும் உணவு, சுவையிலும், மணத்திலும் வித்தியாசம் இருக்கும்.
அதுபோல், 'நாஞ்சில் நாட்டு பகுதி உணவுக்கும் தனிச் சிறப்பு உண்டு. நாஞ்சில் நாட்டில் பிறந்து வளர்ந்து, அந்த பகுதி உணவு உண்டு ரசித்த நாஞ்சில்நாடன், ஒவ்வொரு உணவு வகைகளை பற்றியும், சுவைத்த பதார்த்தங்களை பற்றியும், விரிவான கட்டுரைகளாக இந்த நுாலில் எழுதி இருக்கிறார்.
நம் பாரம்பரிய உணவுகளையும், நம் முன்னோர் சமைத்து சாப்பிட்ட மரபு சார்ந்த உணவுகளையும் இன்றைக்கு மறந்து விட்டனர். வீட்டுப்பலகார ருசி என்பது, குழந்தைகளின் நாக்கில் இல்லை. இதை பற்றி தெரிந்தவர்கள், ரசித்து சாப்பிட்டவர்கள் பெரும்பாலும் பதிவு செய்யவில்லை.
ஆனால் எழுத்தாளர் நாஞ்சில்நாடன், நாஞ்சில் நாட்டு உணவு பற்றி சிறப்பாக எழுதி, நுாலாக ஆவணப்படுத்தி இருக்கிறார். இந்த நுாலில் சொல்லப்பட்டுள்ள உணவு சாப்பிட்டவர்கள், இந்த நுாலை படித்தால் மகிழ்ச்சி அடைவார்கள்.
இந்த பீட்சா, பர்கர் யுகத்தில் கொழுக்கட்டை வகைகளையும், நாட்டுப் பலகாரங்களை பற்றியும், 500 பக்கங்களில் எழுதி இருப்பது வியப்பாக இருக்கிறது. இந்த நுாலுக்காக, 20 ஆண்டுகள் உழைப்பை செலுத்தி இருப்பதாக குறிப்பிடுகிறார்.
நாம் மறந்து போன உணவு அத்தனையும், இந்த நுாலில் ஆவி பறக்க பரிமாறப்பட்டுள்ளது. இது ஒரு சமையல் குறிப்பு புத்தகமல்ல; ஒரு பகுதி மக்களின் உணவு, பண்பாடு, வாழ்க்கை முறையின் அவியல் ஆவணம்.
கன்னியாகுமரி மாவட்டம், நாஞ்சில் நாட்டு உணவு வகைகள் என்றாலும், பெரும்பாலானவை நாம் அறிந்தவைதான்.
பானங்கள் வரிசையில் நீராகாரம் தொடங்கி, பானகம், பதநீர், காடி என்ற இன்னொரு கெட்டியான திரவ வகை, கஞ்சியில் பல வகை, சோறு வகையில் உளுந்தஞ்சோறு...இவை யாவும் இன்று எந்த ஓட்டலிலும் கிடைக்காத உணவாகும்.
சிற்றுண்டிகள், எண்ணெய் பலகாரங்கள், தொடுகறி, துவையல், பச்சடி, கிச்சடி, அவித்தது, சுட்டது, வறுத்தது, பச்சையாக எவற்றையெல்லாம் உண்ணலாம் என விளக்குகிறார். இது மட்டுமில்லாமல், அசைவ வகைகள் அட்டவணை குறிப்புகளும் பிரமிக்க வைக்கின்றன.
ஓணம் சத்யா என்ற பெயரில் சாப்பிடும், கேரள சைவ மதிய விருந்து, நாஞ்சில் நாட்டில் சாதாரணமாக பரிமாறப்படும் கல்யாண விருந்து என்பதை பலர் அறிவார்கள்.
அதைப்போல ஏராளமான குறிப்புகள், செய்திகளை இலக்கியச்சுவையோடு, சரளமான மொழி நடையோடு, சுவையாக படைத்து இருக்கிறார். உணவு பிரியர்கள் படித்தால், சுவையான வாசிப்பு அனுபவம் கிடைக்கும்.
நாம் மறந்து போன உணவு அத்தனையும், இந்த நுாலில் ஆவி பறக்க பரிமாறப்பட்டுள்ளது. இது ஒரு சமையல் குறிப்பு புத்தகமல்ல; ஒரு பகுதி மக்களின் உணவு, பண்பாடு, வாழ்க்கை முறையின் அவியல் ஆவணம்.

