/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய அளவிலான 'பைக் ரேஸ்'; பார்வையாளர்கள் பரவசம்
/
தேசிய அளவிலான 'பைக் ரேஸ்'; பார்வையாளர்கள் பரவசம்
ADDED : ஆக 11, 2025 07:00 AM

கோவை; எம்.ஆர்.எப்., நிறுவனத்தின் எம்.ஆர்.எப்., ரேசிங் மற்றும் காட் ஸ்பீடு சார்பில், நேஷனல் சூப்பர் கிராஸ் சாம்பியன் ஷிப் 2025க்கான இரண்டாம் சுற்று, பைக் ரேஸ், கோவை அவிநாசி சாலையில் உள்ள, கொடிசியா மைதானத்தில் நடந்தது.
'டர்ட் ரேஸ்' எனப்படும் இந்த பந்தயத்தில், பந்தய பாதையில் ஆங்காங்கே மண் மேடுகள் அமைக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. நாடு முழுவதிலும் இருந்து, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 65 வீரர்கள், 7 வீராங்கனைகள், 6 சிறுவர், சிறுமியர் பங்கேற்றனர்.
10 வயதுக்கு உட்பட்டோர், 15 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 'மோட்டோ கிராஸ் ஓபன் கேட்டகிரி என, எட்டு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில், வீரர்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
ஒவ்வொரு போட்டிக்கும், ஒன்பது சுற்றுகள் வீதம் நிர்ணயிக்கப்பட்ட சூழலில், ஒவ்வொரு சுற்றிலும் முந்திச் சென்ற வீரர்கள், மண் மேடுகளை தாண்டி விண்ணில் 'பறந்து' சாகசம் புரிந்தனர். அரங்கத்தில் நிறைந்திருந்த பார்வையாளர்களை இது பரவசப்படுத்தியது.
முதல் சுற்று புனேவிலும், இரண்டாம் சுற்று கோவையிலும் முடிந்துள்ள நிலையில், அடுத்த சுற்றுப் போட்டிகள் குஜராத்தில் நடத்தப்படும்.
அடுத்தடுத்து ஆறு சுற்றுகள் நடத்தப்பட்டு, புள்ளிகள் அடிப்படையில் தேசிய சாம்பியன் அறிவிக்கப்படுவார் என, போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.