/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்களிடம் ரசனை இருக்கும் வரை எந்த கலையும் அழியாது
/
மக்களிடம் ரசனை இருக்கும் வரை எந்த கலையும் அழியாது
ADDED : ஜூன் 29, 2025 12:49 AM

''மக்களிடம் ரசனை இருக்கும் வரை, எந்த கலையும் அழியாது,'' என்கிறார் மூத்த நாடக கலைஞர் மணி.
அவருடன் ஒரு சந்திப்பு...
நான் முதலில் கவிஞர் கணியூரான் நாடக குழுவில் சேர்ந்து நடித்து வந்தேன். பிறகு கோவை அனுராதா நாடக குழுவில், சில வருடங்கள் நடித்தேன்.அப்போது கோவையில் கலை மாமணி கே.ஆர்.எஸ். கிருஷ்ணனின், கே.ஆர்.எஸ்., நாடகக்குழு சிறப்பாக செயல்பட்டுக்கொண்டு இருந்தது.
அந்த குழுவில் இணைந்து, கடந்த 45 வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை 2300 மேடை நாடகங்களில் நடித்து இருக்கிறேன்.
சொந்தமாக, 'கோவை சேம்பர் ஆப் ஆர்ட்ஸ்' என்ற கலைக்குழுவை, 1970-ல் தொடங்கி இப்போதும் நடத்தி வருகிறேன்.
''உங்கள் நாடகங்களில், சிறப்பான நாடகம் என்றால் எதை சொல்வீர்கள்?''
நாங்கள் மேடை ஏற்றிய நாடகங்களில் சிறப்பானது என்றால், எழுத்தாளர் விமலா ரமணி எழுதிய, 'பாரின் ரிட்டர்ன் பரசுராமன்' நாடகம்தான். இந்த நாடகம், தமிழகத்தின் பல இடங்களில் ரசிகர்களின் பாராட்டுதலை பெற்றது.
''நாடகக்கலை அழிந்து வருவதாக கூறப்படுவது குறித்து?''
நாடக கலை இன்று பல்வேறு வடிவ மாற்றங்களை பெற்றுள்ளன. அன்றைக்கு கூத்து கலை மேடை நாடகமாக உருவானது. மேடை நாடகத்தில் இருந்து சினிமா உருவானது.
இன்றைக்கு பல கலை வடிவங்களாக மாறி இருக்கிறது. நிகழ்த்து கலைகள் அனைத்துக்கும், மேடை நாடகங்கள்தான் அடிப்படை. மக்களிடம் ரசனை இருக்கும் வரை, எந்த கலையும் அழியாது.