ADDED : ஆக 24, 2025 11:43 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை ஒப்பிடுகையில் எவ்வித மாற்றமும் கிடையாது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:
இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீர் விலை, கடந்த வார விலையை ஒப்பிடுகையில், எவ்வித மாற்றமும் இன்றி, 45 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 18,500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக, வட மாநிலங்களில், தென்மேற்கு பருவமழையின் தாக்கம் குறைந்துள்ளதால், இளநீரின் தேவை கணிசமாக உயர்ந்துள்ளது. இளநீர் அறுவடை செய்யும் பகுதிகளில், கனரக லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அனைத்து தோப்புகளிலும் இளநீரை முன்கூட்டியே வெட்ட வியாபாரிகள் முனைப்பு காட்டுகின்றனர். சில தோப்புகளில் கூடுதல் விலை கொடுத்து வாங்கவும் முயற்சிக்கப்படுகிறது. விவசாயிகள் எந்த காரணத்தைக் கொண்டும் இளநீரை விலை குறைத்து விற்க வேண்டாம்.
அதேபோல எடைக்கு வெட்டும் விவசாயிகள், 37 நாட்களுக்கு முன்னதாக வெட்ட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.