/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நம்பிக்கையில்லா தீர்மான ஓட்டெடுப்பு கூட்டம் ரத்து; மொபைல்போன் அனுமதிக்காததால் பிரச்னை
/
நம்பிக்கையில்லா தீர்மான ஓட்டெடுப்பு கூட்டம் ரத்து; மொபைல்போன் அனுமதிக்காததால் பிரச்னை
நம்பிக்கையில்லா தீர்மான ஓட்டெடுப்பு கூட்டம் ரத்து; மொபைல்போன் அனுமதிக்காததால் பிரச்னை
நம்பிக்கையில்லா தீர்மான ஓட்டெடுப்பு கூட்டம் ரத்து; மொபைல்போன் அனுமதிக்காததால் பிரச்னை
ADDED : ஆக 08, 2025 08:17 PM

வால்பாறை; வால்பாறை நகராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றுவதற்காக நடந்த சிறப்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சியில் மொத்தம், 21 வார்டுகள் உள்ளன. இதில், 19 வார்டுகள் தி.மு.க., வசமும், அ.தி.மு.க., வி.சி., வசம் தலா ஒரு வார்டும் உள்ளன. நகராட்சி தலைவராக தி.மு.க.,வை சேர்ந்த அழகுசுந்தரவள்ளி உள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே நகராட்சி தலைவருக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே வளர்ச்சிப்பணிகள் நடைபெறுவதில் மோதல் இருந்து வருகிறது. மேலும் வளர்ச்சிப்பணி என்ற பெயரில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக கூறி, மன்றக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நகராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என, 14 கவுன்சிலர்கள் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில், நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு ரகசிய வாக்கெடுப்பு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. நகராட்சி அலுவலகத்தில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், 21வது வார்டு கவுன்சிலர் உமா மகேஸ்வரி முதல் ஆளாக, காலை, 10:50 மணிக்கு கூட்ட அரங்கிற்கு சென்றார். நகராட்சி நுழைவுவாயில் முன்பு, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார், மற்ற 13 கவுன்சிலர்களை தடுத்து, 'மறைமுக தேர்தல் நடைபெறுவதால் உள்ளே மொபைல்போன் கொண்டு செல்ல அனுமதியில்லை,' என்றனர்.
இதையடுத்து, கூட்ட அரங்கினுள் கவுன்சிலர்கள் செல்லாத நிலையில், காலை, 11:40 மணி வரை காத்திருந்த கமிஷனர் கணேசன், கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தார்.
இதனால், ஆவேசமடைந்த கவுன்சிலர்கள் கமிஷனர் மற்றும் நகராட்சி தலைவருக்கு எதிராக கோஷமிட்டு, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த டி.எஸ்.பி., பவித்ரா,''தேர்தல் விதிமுறைப்படி மறைமுக ஓட்டெடுப்பு நடக்கும் போது, உள்ளே யாரும் மொபைல்போன் கொண்டு செல்லக்கூடாது என்பது உங்களுக்கு தெரியாதா. தேர்தல் நடைமுறை விதிப்படி தான் மறைமுக தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. வேண்டுமானால் நீங்கள் கோர்ட்டில் வழக்கு தொடரலாம்,'' என்றார்.
இதனையடுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள், முதல்வர், அமைச்சர், கலெக்டர் ஆகியோரிடம் புகார் தெரிவிக்கவுள்ளோம், எனக் கூறி கலைந்து சென்றனர்.