/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளலுாரில் புது குப்பை கொட்டக் கூடாது: மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் எச்சரிக்கை
/
வெள்ளலுாரில் புது குப்பை கொட்டக் கூடாது: மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் எச்சரிக்கை
வெள்ளலுாரில் புது குப்பை கொட்டக் கூடாது: மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் எச்சரிக்கை
வெள்ளலுாரில் புது குப்பை கொட்டக் கூடாது: மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் எச்சரிக்கை
ADDED : நவ 22, 2025 06:57 AM

கோவை: கோவை நகர்ப்பகுதியில் சேகரமாகும் குப்பை, வெள்ளலுார் கிடங்கில் கொட்டப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கு மேலாக கொட்டி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
அமைச்சகத்துக்கு கடிதம் இதற்கு முன் நடந்த வழக்கில், 2018, அக். 3ல் தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை மாநகராட்சி நிர்வாகம் செயல்படுத்தவில்லை. வெள்ளலுார் சுற்றுவட்டார பகுதியில் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கிறது என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு குறிச்சி - வெள்ள லுார் மாசு தடுப்புக் கூட்டுக்குழு செயலாளர் மோகன் கடிதம் எழுதினார்.
மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியத்தினர், வெள்ளலுார் குப்பை கிடங்கில் ஆய்வு செய்தனர். அவர்களுடன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர், மாநகராட்சி அதிகாரிகள் வந்தனர். 10 ஆண்டுக்கு மேலாக குப்பை தேக்கி வைத்திருப்பது, எம்.சி.சி. பிளான்ட் செயல்படாமல் இருப்பதை அறிந்தனர். நிலத்தடி நீரின் உப்புத்தன்மை மாறியிருப்பது, காற்று மாசடைந்திருப்பது கண்டறிந்தனர்.
குப்பை மேலாண்மையை மேம்படுத்த என்ன செய்ய வேண்டுமென தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழிமுறை வழங்கியது. இதன் நகல்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், கூட்டுக்குழு செயலாளர் மோகன் பெற்றிருக்கிறார்.
அறிக்கையில் பகீர் மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் அனுப்பிய அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வெள்ளலுாரில் ஒன்பது லட்சம் க்யூபிக் டன் பழைய குப்பை தேங்கியுள்ளது. தரம் பிரிக்காமல் கிடங்கிற்கு குப்பை வருகிறது. தினமும் 110 டன் திறந்தவெளியில் கொட்டப்படுகிறது. பழைய குப்பையில் வெளியேறும் கழிவு நீர் நிலத்துக்குள் சென்றதால், நிலத்தடி நீர் பாழ்பட்டுள்ளது. நான்கு இடங்களில் காற்று மாசு சோதனை செய்யப்பட்டது. இரண்டு இடங்களில் மாசுக்கட்டுப்பாடு வாரியம் நிர்ணயித்த அளவை விட காற்று மாசு அதிகமாக உள்ளது.
மாசுக்கட்டுப்பாடு வாரியத்தில் மாநகராட்சி பெற்றுள்ள அனுமதி, 2019, மார்ச் 31ல் காலாவதியாகி விட்டது. காய்கறி கழிவில் உரம் தயாரிக்கும் மையம், சிறிய அளவில் காஸ் தயாரிக்கும் மையம் அனுமதியின்றி செயல்படுகின்றன.
9.40 லட்சம் கியூபிக் டன் பழைய குப்பை கிடங்கு வளாகத்தில் மூன்று இடங்களில் குவித்து வைக்கப்பட்டதில், 70 ஆயிரம் டன் மட்டும் 'பயோமைனிங்' முறையில் அழிக்கப்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை விதிகளின் நடைமுறையில் பெரும்பாலானவற்றை மாநகராட்சி பின்பற்றவில்லை.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

