/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீர்வு கிடைக்கல; விசைத்தறியாளர்கள் விரக்தி
/
தீர்வு கிடைக்கல; விசைத்தறியாளர்கள் விரக்தி
ADDED : ஜூலை 09, 2025 10:17 PM
சோமனூர்; கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில், புதிய கூலி உயர்வு கேட்டு, கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் பல போராட்டங்களை நடத்தினர்.
அதன் காரணமாக, கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, சோமனூர் ரகத்துக்கு, 15 சதவீதமும், மற்ற ரகங்களுக்கு, 10 சதவீதம் கூலி உயர்வை நடைமுறைப்படுத்த ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒப்புக்கொண்டனர்.
ஆனால், சோமனூர் தவிர்த்து, மற்ற பகுதிகளில், ஒப்பந்தப்படி, கூலி உயர்வு வழங்கப்படவில்லை. இந்நிலையில், விசைத்தறியாளர்கள் தங்களுக்கு பாவு நூல் தரும் ஜவுளி உற்பத்தியாளர்களை, தலைமை சங்க நிர்வாகிகளுடன் சென்று நேரில் சந்தித்து, கூலி உயர்வு வழங்க வேண்டும், என, வலியுறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன் பயனாக, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள், ஒப்பந்த கூலியை வழங்க துவங்கி உள்ளனர்.
முழுமையாக தரவில்லை
மற்ற பகுதிகளில் கூலி உயர்வு கிடைத்து வரும் நிலையில், அவிநாசி, தெக்கலூர் பகுதியில், முழுமையான கூலி உயர்வு கிடைக்காததால், விசைத்தறியாளர்கள் விரக்தி அடைந்துள்ளனர். கூலி உயர்வு கேட்டு அவிநாசியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு, திருப்பூர் கலெக்டரிடம் முறையிட்டனர்.
இதுகுறித்து விசைத்தறி கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், 'கலெக்டர், தொழிலாளர் நலத்துறையினரிடம் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க கோரி உள்ளோம்.
மேலும், ஜவுளி உற்பத்தியாளர்களை சந்தித்து கூலி உயர்வை கேட்டு வருகிறோம். கூலி உயர்வை தர மறுப்பவர்களிடம் பாவு நூல் எடுப்பதில்லை, என, முடிவு செய்துள்ளோம்.' என்றனர்.