/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கோவையில் ஒரு வாரத்துக்கு வெயிலை பார்க்க முடியாது' : இடைவெளிக்குப் பின் மீண்டும் மழை
/
'கோவையில் ஒரு வாரத்துக்கு வெயிலை பார்க்க முடியாது' : இடைவெளிக்குப் பின் மீண்டும் மழை
'கோவையில் ஒரு வாரத்துக்கு வெயிலை பார்க்க முடியாது' : இடைவெளிக்குப் பின் மீண்டும் மழை
'கோவையில் ஒரு வாரத்துக்கு வெயிலை பார்க்க முடியாது' : இடைவெளிக்குப் பின் மீண்டும் மழை
ADDED : ஜூலை 23, 2025 09:59 PM

கோவை; வழக்கமாக தென்மேற்கு பருவ மழை ஜூன் முதல் செப்., வரை பெய்யும். நடப்பாண்டு மே இரண்டாவது வாரத்திலேயே துவங்கியது; ஜூன் மாதம் வரை கன மழை பெய்தது.
கோவை மாவட்டத்தில் உள்ள குளம், குட்டைகள் நிரம்பின. பில்லுார் அணை நிரம்பி, பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மாநகராட்சியின் மேற்குப்பகுதி மற்றும் வழியோர கிராமப் பகுதிகளின் தண்ணீர் தேவையை போக்கும், சிறுவாணி அணை பகுதியிலும் கன மழை கா ணப்பட்டது.
நீர் மட்டம் மளமளவென உயர்ந்தது. அணையின் பாதுகாப்பை கருதி, மதகுகளை திறந்து, தண்ணீர் வெளியேற்றப்பட்டது. தமிழக அரசு கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, கேரள நீர்ப்பாசனத்துறை மதகை மூடியது.
ஜூலை துவக்கத்தில் இருந்தே மழைப்பொழிவு இல்லை. இருந்தாலும், இரு மாநில ஒப்பந்தப்படி, நாளொன்றுக்கு, 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது.
அதனால், நீர் மட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. இச்சூழலில் நீர்ப்பிடிப்பு பகுதியில், மீண்டும் மழை பெய்யத் துவங்கியிருக்கிறது.
சில நாட்களாக சாரலாக பெய்து வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அணை பகுதியில், 12 மி.மீ., அடிவாரத்தில், 4 மி.மீ., மழை பதிவானது. 10.41 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, வினியோகிக்கப்பட்டது. மழைப்பொழிவு தொடர்வதால், 41.92 அடியாக நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது.
வானிலை ஆராய்ச்சியாளர் சந்தோஷ் கிருஷ்ணன் கூறுகையில், ''தென்மேற்கு பருவ மழை அடுத்த ஒரு வாரத்துக்கு மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகள், மேற்கு பாலக்காடு கணவாய் பகுதியில் கனமழை பெய்யும். கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்கும்.
கொங்கு மண்டல சமவெளிப் பகுதிகளில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; அவ்வப்போது சாரல் அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த ஒரு வாரத்துக்கு, கொங்கு மக்கள் வெயிலை பார்க்க முடியாது.
கோவை நகர் பகுதியில், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. கிழக்கு பாலக்காடு கணவாயில், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 29ல் இருந்து தென்மேற்கு பருவமழை தீவிரம் குறையும்,'' என்றார்.