ADDED : ஆக 28, 2026 01:10 PM
கோவை: டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், எச்1என்1 இன்ப்ளூயன்சா வைரஸால் பரவும் பன்றிக்காய்ச்சலுக்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை என மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி பாலுசாமி தெரிவித்தார்.
திடீர் அதிக காய்ச்சல், சளி, வறட்டு இருமல், தலைவலி, உடல் வலி, அதீத சோர்வு ஆகிய அறிகுறிகள் இருந்தால், பன்றிக்காய்ச்சலாக இருக்கலாம் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். சிலருக்கு வாந்தி, வயிற்று போக்கு ஏற்படலாம்.
இப்பாதிப்பு இருப்பவர்கள் அலட்சியம் காட்டாமல், மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம். சுய மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டாமென, பொது சுகாதாரத்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுசாமி கூறுகையில், ‘‘ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில், பன்றிக்காய்ச்சலுக்காக யாரும் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் அறிகுறிகளுடன் வருவோருக்கு பரிசோதித்தல், மருந்து வழங்குதல், தொடர் கண்காணிப்பில் வைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன,’’ என்றார்.
